கொழு கொழு குழந்தைகள் போட்டி

ஏற்காடு கோடை விழாவில் கொழு கொழு குழந்தைகள் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Update: 2022-05-29 20:05 GMT

சேலம்:

ஏற்காடு கோடை விழாவில் கொழு கொழு குழந்தைகள் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கோடை விழா

ஏற்காட்டில் 45-வது கோடை விழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நாளை மறுநாள் (1-ந் தேதி) வரை நடக்கிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் கோடை விழாவை காண ஏற்காட்டில் குவிந்துள்ளனர். அப்படி ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசின் பல்வேறு துைறகள் சார்பில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டி நடத்தப்படுகிறது.

மகளிர் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் இணைந்து ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தின. போட்டிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஏற்காடு ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல் பரிசு

இந்த போட்டியில் ஏற்காட்டில் உள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். இதில் குழந்தைகளுக்கு கொழு கொழு குழந்தை, நடனம், வடிவங்களை கண்டுபிடித்தல், கலர் பந்து சேமிப்பது உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. கொழுகொழு குழந்தை போட்டியில் ஏற்காடு பகுதியை சேர்ந்த சதீஷ்- அனுப்பிரியா தம்பதியின் குழந்தை அகமத்தியா முதல் பரிசை பெற்றது.

தொடர்ந்து நடந்த மகளிருக்கான பாரம்பரிய உணவு சமைக்கும் போட்டிக்கு நடுவர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், வெங்கடேசன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் செயல்பட்டனர். இந்த போட்டியில் ராகி, கம்பு, கோதுமை கலந்த களி சமைத்த விஜயா முதல் பரிசும், கம்பு சுண்டல் அறுசுவை உணவு சமைத்த மகாலட்சுமிக்கு 2-ம் பரிசும், பாசிப்பருப்பு எள் உருண்டை தயாரித்த சுமதிக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்