மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபரை மறித்து ரூ.17 லட்சம் வழிப்பறி

திருப்பூரில் மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபரை மர்ம ஆசாமிகள் 3 பேர் வழிமறித்து ரூ.17 லட்சத்தை வழிப்பறி செய்து கைவரிசை காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-02-18 17:43 GMT

திருப்பூரில் மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபரை மர்ம ஆசாமிகள் 3 பேர் வழிமறித்து ரூ.17 லட்சத்தை வழிப்பறி செய்து கைவரிசை காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ரூ.17 லட்சம்

திருப்பூர் பெரிய கடைவீதி பகுதியை சேர்ந்தவர் ஷபுதீன் (வயது 44). இவர் காங்கயம் ரோடு ராக்கியாபாளையம் பகுதியில் பனியன் வேஸ்ட் வியாபார தொழில் செய்து வருகிறார். இதற்காக அவர் வெளியில் பணம் வாங்கி, கொடுப்பது வழக்கம்.

இந்த நிலையில் ஷபுதீன் திருப்பூர் அவினாசி ரோடு குமார்நகர் அருகே முருங்கபாளையம் மெயின் வீதியில் பனியன் நிறுவனம் நடத்தி வரும் சரவணக்குமார் என்பவரிடம் இருந்து ரூ.17 லட்சத்தை வாங்கி வருமாறு கூறி அவரிடம் வேலை செய்யும் சாகுல் ஹமீது (32) என்பவரை அனுப்பி வைத்துள்ளார்.

பட்டப்பகலில் வழிப்பறி

இதையடுத்து நேற்று மதியம் சாகுல் ஹமீது ஒரு மோட்டார்சைக்கிளில் முருங்கப்பாளையம் சென்றார். பின்னர் பனியன் நிறுவனத்தில் இருந்த சண்முகராஜ் என்பவரிடம் இருந்து ரூ.17 லட்சத்தை ஒரு பையில் வாங்கிக்கொண்டு சாகுல் ஹமீது அங்கிருந்து புறப்பட்டார். அவர் அங்கிருந்து புறப்பட்டு 200 மீட்டர் தூரம் சென்ற நிலையில் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே மோட்டார்சைக்கிளில் வந்த 3 ஆசாமிகள் சாகுல் ஹமீது மோட்டார்சைக்கிளை திடீரென வழிமறித்து நிறுத்தினர்.

பின்னர் அவர்கள் சாகுல்ஹமீதுவிடம் இருந்த பணப்பையை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சாகுல் ஹமீது அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த 3 பேரை பிடிப்பதற்கு முயன்றார். ஆனால் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

போலீசார் விசாரணை

இதனால் அதிர்ச்சியடைந்த சாகுல்ஹமீது உடனடியாக இதுகுறித்து உரிமையாளர் ஷபுதீனிடம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த ஷபுதீன் சாகுல் ஹமீதுவிடம் நடந்தவிவரம் குறித்து கேட்டறிந்தார். வழிப்பறி நடந்த தகவல் அப்பகுதியில் பரவியதும் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த கொங்குநகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார், 15 வேலம்பாளையம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகள்

அதில் சாகுல் ஹமீதுவிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஆசாமிகள் 3 பேரும் தலா 30 வயதுக்குட்பட்ட வாலிபர்கள் என்று கூறப்படுகிறது. 3 பேருமே முகக்கவசம் அணிந்துள்ளனர். சாகுல் ஹமீதுவிடம் பறித்த பணப்பையை மோட்டார்சைக்கிளின் முன்புறம் வைத்திருப்பதும் கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவாகி உள்ளது.

இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூரில் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து ரூ.17 லட்சத்தை மர்ம ஆசாமிகள் 3 பேர் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்