தனியார் நிறுவன ஊழியரை தாக்கி ரூ.1 லட்சம் கொள்ளை

தனியார் நிறுவன ஊழியரை தாக்கி ரூ.1 லட்சம் கொள்ளை

Update: 2022-07-11 14:27 GMT

கோவை, ஜூலை

சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கி ரூ.1 லட்சம் கொள்ளையடித்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தனியார் நிறுவன ஊழியர்

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவிலை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது40). இவர் சில ஆண்டுகளாக கோவை செட்டிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது சொந்த ஊரான கடலூர் செல்வதற்காக கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அவர் வைத்திருந்த சம்பள பணம் ரூ.1 லட்சத்தை தனது பேக்கில் வைத்திருந்தார். இந்தநிலையில், குடிப்பழக்கம் உடைய ராஜசேகர், பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்குள் சென்று மது அருந்தினார். பின்னர் இரவு 12 மணியளவில் குடிபோதையில் வெளியே வந்துள்ளார்.

ரூ.1 லட்சம் கொள்ளை

தள்ளாடிய படி வந்த அவரை நோட்டமிட்ட 2 பேர் அவரை பஸ்சில் ஏற்றி விடுவதற்கு உதவி செய்வது போல் நடித்து அழைத்து சென்றுள்ளனர். போதையில் இருந்த அவருக்கு அந்த நபர்கள் தன்னை எங்கு அழைத்து செல்கிறார்கள் என்று தெரியவில்லை.

இதையடுத்து அந்த 2 பேரும் அங்குள்ள தனியார் பள்ளி அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று இரும்பு கம்பியால், தாக்கி அவரிடம் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்