தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 50 பவுன் நகைகள் கொள்ளை

பண்ருட்டியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-09-01 17:27 GMT

பண்ருட்டி, 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி லிங்காரெட்டிபாளையம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனுவாசன்(வயது 50). இவருக்கு கவுரி(40) என்கிற மனைவியும், பாலகிருஷ்ணன்(19) என்ற மகனும் உள்ளனர். சீனுவாசன் கடந்த சில ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சொந்த ஊரில் மகனுடன் வசித்து வந்த கவுரி நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு, உறவினர்களுடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றார். முன்னதாக கவுரி தான் வளர்த்து வரும் நாய்க்கு பக்கத்து வீட்டை சேர்த்த மூதாட்டி ஒருவரிடம் உணவு கொடுக்குமாறு கூறிவிட்டு சென்றிருந்தார்.

துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இந்த நிலையில் நேற்று பக்கத்து வீட்டு மூதாட்டி நாய்க்கு உணவு வைப்பதற்காக கவுரி வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி இதுபற்றி கவுரிக்கும், பண்ருட்டி போலீசாருக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையிலான போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டுக்கு விரைந்து வந்து பார்வையிட்டதோடு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கவுரி மகனுடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

தடயங்கள் சேகரிப்பு

இதனிடையே கடலூரில் வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்பநாய் கூப்பர் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி மெயின் ரோடு வரை ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கடலூரில் வந்த கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர்.

இந்த துணிகர சம்பவம் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா கூறுகையில், வீட்டில் 50 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மகன், உறவினர்களுடன் சுற்றுலா சென்ற கவுரி சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறார். அவா் வந்தபிறகு தான் கொள்ளை போன நகைகள், பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரம் முழுவதுமாக தெரியவரும் என்றார்.

மேற்கண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்