சுவரில் துளைபோட்டு நகை அடகு கடையில் கொள்ளை முயற்சி

தஞ்சை அருகே சுவரில் துளையிட்டு நகை அடகு கடையில் கொள்ளை அடிக்க முயன்ற கும்பல் தங்களை துரத்தியவர்களை கற்களால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-07-05 19:05 GMT

தஞ்சை அருகே சுவரில் துளையிட்டு நகை அடகு கடையில் கொள்ளை அடிக்க முயன்ற கும்பல் தங்களை துரத்தியவர்களை கற்களால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அடகு கடை

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கொல்லாங்கரை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தஞ்சை அருகே மருங்குளம் நால்ரோடு பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

அடகு கடைக்கு அருகே செந்தில்குமார் என்பவருடைய மருந்து கடை உள்ளது. வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு ரவிச்சந்திரனும், செந்தில்குமாரும் தங்களுடைய கடைகளை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

அலாரம் ஒலித்தது

இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் அருகில் உள்ள மைதானத்தில் இருந்து 5-க்கும் அதிகமான நபர்களை கொண்ட கும்பல் மருந்து கடையின் பூட்டை உடைத்து அதன் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் மருந்து கடையின் வழியாக அடகு கடைக்குள் புகுவதற்காக சுவரில் துளை போட்டனர்.

அதன் வழியே மர்மநபர்கள் அடகு கடைக்கு உள்ளே சென்ற போது அங்கிருந்த அலாரம் ஒலிக்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மருந்து கடையில் இருந்த மடிக்கணினி மற்றும் ரூ.40 ஆயிரத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

கற்களை வீசி தாக்குதல்

இதனிடையே அலாரம் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு சென்று அடகு கடையில் கொள்ளையடிக்க முயன்றவர்களை துரத்தினர். இந்த நிலையில் துரத்தியவர்கள் மீது அந்த கும்பல் சாலையோரம் கிடந்த கற்களை எறிந்து தாக்கினர். இதில் ஸ்ரீராம் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து மர்ம நபர்கள் மடிக்கணினியை அங்கேயே வீசி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதை அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா, இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் தடயவியல் நிபுணர்களுடன் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்