ரத்தகாயத்துடன் தப்பிய கொள்ளையன் கைது

ரத்தகாயத்துடன் தப்பிய கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.

Update: 2023-02-26 18:53 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரத்தில் வசித்து வருபவர் நவநீதகிருஷ்ணன். இவர் பேன்சிரக பட்டாசுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அட்டை குழாய்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் சென்னை சென்று இருந்தார். அப்போது இவரது வீட்டுக்கு வந்த மர்மநபர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளான். இதில் அந்த கொள்ளையனுக்கு காலில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையன் அங்கிருந்து பொருட்கள் எதுவும் கொள்ளையடிக்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. வீடு முழுக்க காலின் தடம் இருந்தது. இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து நவநீதகிருஷ்ணன் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வீட்டினில் பதிவாகி இருந்த கால்தடம், கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த கைரேகைகள் ஆகியவை வைத்து விசாரித்த போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பழைய குற்றவாளியான எஸ்.என்.புரம் விவேகானந்தர் காலனியை சேர்ந்த பாண்டியராஜன் (வயது 35) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் குடிபோதையில் வீடு புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், காலில் ரத்தகாயம் ஏற்பட்டதால் கொள்ளையடிக்காமல் திரும்பியதும் தெரியவந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்