வீடு புகுந்து செல்போன் திருடியபோது வாலிபர் பிடிக்க முயன்றதால் 3-வது மாடியில் இருந்து குதித்த கொள்ளையன் பலி - சென்னை சைதாப்பேட்டையில் பரபரப்பு

வீடு புகுந்து செல்போன் திருடியபோது வீட்டில் இருந்த வாலிபர் பிடிக்க முயன்றதால் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தப்பிச்செல்ல முயன்ற கொள்ளையன் பலியான சம்பவம் சென்னை சைதாப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-05-30 07:33 GMT

சென்னை சைதாப்பேட்டை சேசாச்சலம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் மோகன்ராஜ் (வயது 35) என்பவர் நண்பர்கள் சிலருடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். அக்னி வெயிலால் ஏற்பட்ட புழுக்கம் காரணமாக நேற்று முன்தினம் இரவு அறையின் கதவை காற்றுக்காக திறந்து வைத்துவிட்டு மோகன்ராஜ், நண்பர்களுடன் தூங்கிக்கொண்டிருந்தார்.

நள்ளிரவில் கொள்ளையன் ஒருவர் திடீரென மோகன்ராஜின் வீட்டுக்குள் புகுந்தான். அவன் அங்கிருந்த விலை உயர்ந்த செல்போனை திருடிவிட்டு வீட்டுக்குள் வேறு ஏதாவது பொருட்கள் உள்ளதா? என்று நோட்டமிட்டான்.

அந்த நேரத்தில் சத்தம் கேட்டு மோகன்ராஜ் கண்விழித்து எழுந்தார். வீட்டுக்குள் கொள்ளையன் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், திருடன்... திருடன் என கூச்சலிட்டபடி கொள்ளையனை பிடிக்க முயன்றார்.

இதை சற்றும் எதிர்பாராத கொள்ளையன், திருடிய செல்போனை தூக்கி வீசிவிட்டு 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக சிமெண்டு பலகையில் அடிப்பட்டு, மரக்கிளையில் மோதி கீழே விழுந்தார்.

இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மோகன்ராஜ் இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சைதாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலியான கொள்ளையன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த கொள்ளையன் சைதாப்பேட்டை கோட்டமேடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (31) என்பது தெரிய வந்தது. இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த மணிகண்டன் மீண்டும் திருட்டில் ஈடுபட்டபோது உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்