தானிய உலர்களமாக மாறிய சாலைகள்

விழுப்புரம் மாவட்டத்தில் தானிய உலர்களமாக சாலைகள் மாறியுள்ளன.

Update: 2023-02-25 18:45 GMT

விழுப்புரம் மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட மாவட்டமாகும். இங்கு நெல், கரும்பு மற்றும் சிறுதானிய வகைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால்தான் தமிழகத்திலேயே உணவு உற்பத்தியில் கடந்த சில ஆண்டுகளாக விழுப்புரம் தொடர்ந்து சிறப்பிடம் பெற்று வருகிறது.

மாவட்டத்தில் ஆண்டுதோறும் சொர்ணவாரி, சம்பா, நவரை ஆகிய 3 பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதுதவிர காலநிலை மாற்றத்திற்கேற்ப உளுந்து, கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம், எள் உள்ளிட்ட பயிர்களும் சராசரியாக பயிர் செய்யப்படுகிறது.

உலர்களமாகும் சாலைகள்

ஆனால் இந்த தானியங்களை விவசாயிகள் உலர வைக்க ஏதுவாக போதுமான உலர்களங்கள் இல்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒரு சில இடங்களிலேயே தானிய உலர்களங்கள் உள்ளன. இதனால் பெரும்பாலான விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்த தானிய வகைகளை உலர வைக்க தங்கள் பகுதியில் உள்ள சாலைகளையே உலர்களமாக பயன்படுத்தி வரும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.

கிராமப்புற சாலைகள் மட்டுமின்றி மாநில நெடுஞ்சாலையோரங்கள், தேசிய நெடுஞ்சாலைகளின் சர்வீஸ் சாலைகளில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த விளைபொருட்களை சாலையில் கொட்டி உலர வைத்து வருகின்றனர். இதற்கு முன்னர் கம்பு சீசனில் மட்டுமே ரோட்டில் கொட்டி உலர வைத்து வந்தனர். தற்போது நெல், உளுந்து உள்ளிட்ட அனைத்து வகை பயிர்களையும் சாலைகளில் கொட்டி உலர வைக்கும் நடைமுறையை விவசாயிகள் ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்.

போக்குவரத்துக்கு இடையூறு

இதனால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு மட்டுமின்றி வாகனங்கள் சில நேரங்களில் பழுதாகி நிற்கும் நிலைமையும் ஏற்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் சில சமயங்களில் விபத்துகள் ஏற்படவும் காரணமாக அமைகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சற்று அதிவேகமாக செல்லும்பட்சத்தில் அங்கு கொட்டிக்கிடக்கும் விளைபொருட்களில் சிக்கி வழுக்கி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலைமை அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

விவசாய பயிர்களை சாலைகளில் கொட்டி உலர வைக்கும்போது ஏற்படும் தூசி மாசுபாட்டால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கண்களில் பாதிப்புகள் ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள், வாகன போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை தானிய உலர்களமாக பயன்படுத்தி வருவதை கைவிட வேண்டும். அப்போதுதான் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும் என்கிறார்கள் வாகன ஓட்டிகள்.

உலர்களம் அமைக்கப்படுமா?

மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் தானிய உலர்கள வசதி இல்லாததால் வேறு வழியின்றி சாலையில் தானியங்களை கொட்டி உலர வைப்பதாகவும், இதை தவிர வேறு எதுவும் உதவியாக இல்லை என்றும் முடிந்த வரை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல்தான் பயிர்களை உலர வைக்கிறோம். அனைத்து கிராமங்களிலும் விவசாய பயன்பாட்டுக்காக தானிய உலர்களம் அமைத்துக்கொடுத்தால் நாங்கள், சாலைக்கு வர வேண்டிய அவசியமே இல்லை. பல ஆண்டுகளாக மாவட்டத்தில் அதிக அளவில் உலர் களங்கள் அமைத்து கொடுக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். எங்கள் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகமும் அடிக்கடி உத்தரவாதம் அளித்து வருகிறது. ஆனால் ஆண்டுகள் தான் கடந்து போகிறது. எங்களது கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எங்களுக்கு தேவையான உலர் களங்களை அமைத்து கொடுக்க வேண்டியது என்பது மாவட்ட நிர்வாகத்தின் கடமை என்கிறார்கள் விவசாயிகள்.

விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறோம் என்று ஆட்சியாளர்கள் கூறி வருகிற நிலையில் இன்னும் பல கிராமங்களில் தானியங்களை உலர வைக்க முடியாமல் விவசாயிகள் அல்லல்பட்டு கொண்டிருப்பதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. எனவே விவசாயிகளின் சிரமத்தை போக்கிடும் வகையில் கிராமங்கள்தோறும் தானிய உலர்களம் அமைத்துக்கொடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்