மீன் குட்டைகளுக்கு குடிநீரை பயன்படுத்தி முறைகேடு:அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் மறியல்நல்லம்பள்ளி அருகே பரபரப்பு

Update: 2023-07-07 19:00 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே மீன் குட்டைகளுக்கு குடிநீரை முறைகேடாக பயன்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி அரசு பஸ்சை சிறைபிடித்து கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மீன் குட்டைகளுக்கு குடிநீர்

நல்லம்பள்ளி அருகே மானியதஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட மலையப்பநகர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்கிராமத்தைச் சேர்ந்த மக்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி நிர்வாகம் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து, ஊராட்சி குடிநீர் மற்றும் ஒகேனக்கல் குடிநீர் வழங்கி வருகிறது.

இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து செல்லும் தண்ணீரை முறைகேடாக பூமிக்கடியில் பிளாஸ்டிக் பைப் அமைத்து பயன்படுத்தி அதே பகுதியை சேர்ந்த சிலர் 3 குட்டைகள் அமைத்து மீன்களை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இரவு-பகலாக பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து முறைகேடாக மீன்குட்டைகளுக்கு குடிநீரை பயன்படுத்துவதாகவும், இதனால் கிராம மக்களுக்கு தேவையான அளவில் குடிநீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

மறியல் போராட்டம்

இந்த நிலையில் கிராம மக்கள், குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான மீன் குட்டை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், இதற்கு துணைபோன டேங்க் ஆப்ரேட்டரை பணி நீக்கம் செய்யக்கோரியும், நேற்று மலையப்பநகருக்கு வந்த அரசு பஸ்ஸை, காலிகுடங்களுடன் சிறைப்பிடித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொப்பூர் போலீசார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்று சிறைபிடிக்கப்பட்ட பஸ்ஸை விடுவித்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்