மூதாட்டி குடும்பத்துடன் சாலை மறியல்
சிப்காட்டுக்கு நிலம் அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து போச்சம்பள்ளி அருகே மூதாட்டி குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.
மத்தூர்
போச்சம்பள்ளி அருகே உள்ள ஓலைப்பட்டி கிராமத்தில் சிப்காட் வளாகம் உள்ளது. இங்கு பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த சிப்காட் வளாகங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சிப்காட்டுக்கு ஏற்கனவே நிலத்தை கையகப்படுத்திய தனியார் நிறுவனங்களின் சார்பில் ஓலைப்பட்டி கூட்டுரோடு அருகே நிலத்தை அளவீடு செய்வதற்காக அதிகாரிகள் வந்தனர். இதற்கு அதே பகுதியை சேர்ந்த மூதாட்டி சின்னத்தாய், அவரது அண்ணன் மகன் பழனி மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் நிலம் தங்களுக்கே சொந்தம் எனவும், சிப்காட்டில் செயல்படும் தனியார் நிறுவனங்கள் நிலத்தை அளவீடு செய்து எடுக்கக்கூடாது எனவும் கூறினர். அப்போது மூதாட்டி குடும்பத்துடன் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மூதாட்டி மற்றும் குடும்பத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.