உத்தனப்பள்ளியில் பொதுமக்கள் சாலை மறியல்

உத்தனப்பள்ளியில் சிப்காட் வளாகம் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 550 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-11 18:45 GMT

ராயக்கோட்டை

உத்தனப்பள்ளியில் சிப்காட் வளாகம் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 550 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிப்காட் வளாகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, தேன்கனிக்கோட்டை வட்டங்களில் உத்தனப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக வருவாய்த்துறை அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர். இதற்கு கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விவசாய நிலங்களில் சிப்காட் வளாகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உத்தனப்பள்ளி பஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

550 பேர் கைது

அப்போது விவசாயிகள் கூறுகையில், இப்பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். விவசாய நிலங்களில் 1,000 மின் இணைப்பு, தென்னை மற்றும் பழ வகை மரங்கள், கோழி பண்ணைகள், பசுமைகுடில், 15-க்கும் மேற்பட்ட ஏரிகள், நீர்வழித்தடங்கள் அமைந்துள்ளன. இந்த பகுதி 3 போகம் விளையக்கூடிய நீர்வளம் உள்ள பகுதியாகும். இதனால் சிப்காட் அமைக்க கூடாது என்று வலியுறுத்தினர்.

நீண்ட நேரம் போலீசார் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 550 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்