குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

கபிலர் மலை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-08 19:16 GMT

பரமத்திவேலூர்

குடிநீர் வினியோகம்

பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையத்தில் இருந்து பரமத்தி வரையிலும் உள்ள சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணி தற்போது நடைபெற்று வருகிறது. கபிலர் மலை அருகே இருக்கூர் பகுதியில் சாலை விரிவாக்க பணியின் போது குடிநீர் இணைப்புகள் ‌துண்டிக்கப்பட்டதால் கடந்த‌ 2 வாரங்களுக்கு மேலாக இருக்கூர் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை.

இதனால் பாதிப்புக்குள்ளான அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் உடனடியாக குடிநீர் இணைப்புகளை சரி செய்து குடிநீர் வழங்கக்கோரி பரமத்திவேலூரில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலை மற்றும் வேலூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போலீசார் பேச்சுவார்த்தை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வருவாய் துறையினரிடம் பேசி‌‌ இருக்கூரில் உள்ள காலனியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ கபிலர்மலையில் இருந்து பரமத்தி செல்லும் சாலை மற்றும் வேலூர் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள்மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்