மாணவ-மாணவிகளுடன் பொதுமக்கள் சாலை மறியல்

தேன்கனிக்கோட்டை அருகே ஜல்லி கிரசருக்கு லாரிகள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து மாணவ-மாணவிகளுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-19 18:45 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே ஜல்லி கிரசருக்கு லாரிகள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து மாணவ-மாணவிகளுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். லாரிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கிரசர் உரிமையாளர்கள், தொழிலாளர்களும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜல்லி கிரசர்கள்

தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கொரட்டகிரி கிராமத்தை சுற்றி ஜல்லி கிரசர்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சென்று வரும் லாரிகளால் சாலைகள் குண்டும், குழியுமாக மாறி வருகிறது. மேலும் அந்த பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் சிரமத்திற்குள்ளகினர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சாலைமறியல், போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராமத்தின் வழியாக லாரிகள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். ஆனால் ஜல்லி கிரசருக்கு லாரிகள் தொடர்ந்து சென்று வந்தன. இதற்கு அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள் லாரிகள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவ-மாணவிகள் அங்கே அமர்ந்து உணவு சாப்பிட்டனர் இவர்களுக்கு பொதுமக்கள் உணவு வழங்கினர். இதையறிந்த குவாரி உரிமையாளர்கள் மற்றும் கிரசரில் பணியாற்றும் தொழிலாளர்கள் லாரிகள் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்படும் நிலை உருவானது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பூரணம் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாசில்தார் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்