பாதையில் வேலி அமைத்ததை கண்டித்துபொதுமக்கள் சாலை மறியல்

ஜேடர்பாளையம் அருகே பாதையில் வேலி அமைத்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-10 18:45 GMT

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே சோழசிராமணி, அண்ணா நகர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 50-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதில் அனைவரும் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். அதில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செல்ல அப்பகுதியில் உள்ள கோவில் நிலம் வழியாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சென்று வந்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

இந்த கோவில் இடத்திற்கு தற்போது கம்பி வேலி அமைக்கப்பட்டதால் வழக்கமாக அண்ணா நகர் பகுதிக்கு சென்று வந்த பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு மனு கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் பாதையை அடைத்து கம்பி வேலி அமைத்ததை கண்டித்தும், உடனடியாக அந்த கம்பி வேலியை அகற்றக்கோரியும் ஜேடர்பாளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த வருவாய்த்துறை மற்றும் ஜேடர்பாளையம் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்