பழமையான மரங்களை வெட்டாமல் சாலை விரிவாக்க பணி

பழனியில், பழமையான மரங்களை வெட்டாமல் சாலை விரிவாக்க பணி நடைபெறுகிறது. இதனால் தமிழக அரசுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Update: 2022-07-05 16:48 GMT

பழனியில் இருந்து தாராபுரம் செல்லக்கூடிய சாலையில் 4 கிலோ மீட்டர் தூரம் ரூ.3 கோடியில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ள நெடுஞ்சாலை துறை முடிவு செய்தது. அப்போது, மானூர் கிராமத்தில் சாலையோரத்தில் வளர்ந்து இருந்த நூறு ஆண்டுகள் பழமையான மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக வெட்ட வேண்டிய நிலை உருவானது. இந்த நிலையில் கிராம மக்கள் மரங்களை வெட்டாமல் விரிவாக்க பணி மேற்கொள்ள தமிழக அரசுக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதில் பழனிக்கு தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழா காலங்களில் பாதயாத்திரையாக வரக்கூடிய லட்சக்கணக்கான பக்தர்கள் மானூர் கிராமத்துக்கு வரும்போது சாலையோரத்தில் குடை போல வளர்ந்துள்ள மரங்களுக்கு கீழே தங்கி ஓய்வெடுத்து செல்கின்றனர். நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் தான் தங்களது கிராமத்தின் அடையாளம் என்றும், அதனை வெட்ட வேண்டாம் எனவும் கிராம மக்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதனை அடுத்து சாலையோரத்தில் உள்ள மரங்களை வெட்டாமல் சாலை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக நெடுஞ்சாலைத்துறை தற்போது விரிவாக்க பணிகளை செய்து முடித்துள்ளது. கிராம மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மரங்களை வெட்டாமல் சாலை விரிவாக்க பணியை மேற்கொண்ட தமிழக அரசுக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்