சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி
கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி இலக்கிய மன்றம், ராஜ் யோகா ஸ்கேட்டிங் மற்றும் ஸ்போர்டஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் சார்பாக சாலை பாதுகாப்பு குறித்து மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் பேரணியை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டுபிரசுரங்களை வழங்கினார்.
பயணியர் விடுதி முன்பு தொடங்கிய இந்த பேரணி மெயின்ரோடு, மாதாங்கோவில் ரோடு, எட்டயபுரம் ரோடு, புது ரோடு இலக்கிய மன்ற அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது. பேரணியில் 100-க்கு மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். பேரணியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சொக்கலிங்கம், மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்்டர் அரிக்கண்ணன், எவரெஸ்ட் மெட்ரிக் பள்ளி முதல்வர் மகாலட்சுமி, சிறப்பு மகப்பேறு நிபுணர் மருத்துவர் தீபா, எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி செயலாளர் கண்ணன், ராஜ் யோகா ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் மாநில ஆலோசகர் மணிகண்டன், டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல், சடகோபன் ஆகியோர் கலந்துகொண்டனர். யோகா ஸ்கேட்டிங் பயிற்சியாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
போட்டி ஏற்பாடுகளை இலக்கிய மன்றம் ராஜமாணிக்கம், சுரேஷ் ராஜா, யோகா ஸ்கேட்டிங், ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் தலைவர் நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.