உடுமலை பகுதியில் போடப்பட்ட தரமற்ற சாலையால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது.
வரிப்பணம் வீண்
திறமையான நிர்வாகம் என்பது, பொருள் சேரும் வழிகளை மென்மேலும் உருவாக்கியும், சேர்த்த பொருளை முறையாக தொகுத்து, தகுந்த முறையில் காப்பாற்றி, திட்டமிட்டு செலவு செய்தலே நல்லாட்சிக்கு இலக்கணமாகும். இதை "இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லதரசு"என்ற குறல் மூலமாக வள்ளுவர் உணர்த்தி உள்ளார்.
அதற்கு நேர் மாறாக உள்ளது உடுமலை நகராட்சி நிர்வாகத்தின் நிலை. பொருள் சேர்த்து பாதுகாத்து பயன்படுத்துவதில் எந்தவித புரிதலும் திட்டமிடலும் இல்லை. ஏனோ தானோ என்று பெயரளவுக்கு திட்டங்களை தொடங்கி முழுமையாக முடிக்காமல் பாதியில் விட்டு விடுவது, தொடங்கும் பணியை அரைகுறையாக செய்வது, பொதுமக்களின் நலன் சார்ந்த பணிகளுக்கு முன்னுரிமை அளிக்காதது, வரிப்பணத்தை வீணடிப்பது என நிர்வாகத்தின் குறைகளை பட்டியலிட்டு சொல்லலாம்.
சீரழிந்த நகராட்சி
அதை உணர்த்துவது போன்று ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள தரைமட்ட பாலங்கள், முழுமை பெறாத கழிவு நீர் கால்வாய் தூர் வரும் பணி, கடந்த சில நாட்களாக அமைக்கப்பட்டு வரும் தரம் குறைவான சாலை பணி பொதுமக்கள், வாகன ஓட்டிகளை விரக்தியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது. சீர்மிகு நகராட்சி சீரழிந்த நகராட்சியாக மாறி உள்ளது.
பழைய தார் சாலைகள் கால் அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு புதிதாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலையில் உள்ள மேடு பள்ளங்களை சமன் செய்யாமல் அரைகுறையாக அமைக்கப்படுகிறது. இந்த பணியை நகராட்சி நிர்வாகம் பெயரளவுக்கு கூட நேரில் ஆய்வு செய்யவில்லை. அதிகாரிகள் பணியை செய்கின்றனரா? இல்லையா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் மக்களின் வரி பணமும் அது செலவிடப்பட்ட அதற்கான நோக்கமும் வீணாகி உள்ளது.
பொதுமக்கள் அதிருப்தி
நிதி பற்றாக்குறையில் தத்தளித்து வருகின்ற சூழலில் ஒவ்வொரு ரூபாயும் பொன் போன்று பாதுகாத்து மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துவது நிர்வாகத்தின் கடமையும், பொறுப்பும் ஆகும். திறனற்ற நிர்வாகத்தால் பல திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி லட்சக்கணக்கில் வீணாகி உள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு அரசு மீது கடும் அதிருப்தி நிலவி வருகிறது. எனவே உடுமலை நகராட்சி நிர்வாகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தரமாக உள்ளதா என்றும், அதற்காக ஒதுக்கப்படுகின்ற நிதி முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்று மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்தும், நகராட்சியின் வரவு செலவுகளை தணிக்கை செய்து மக்களின் வரிப்பணம் வீணாவதை தடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.