அய்யாற்றில் வெள்ளப்பெருக்கால் சாலை துண்டிப்பு
உப்பிலியபுரம் அருகே அய்யாற்றில் வெள்ளப்பெருக்கால் சாலை துண்டிக்கப்பட்டது.
உப்பிலியபுரம் அருகே அய்யாற்றில் வெள்ளப்பெருக்கால் சாலை துண்டிக்கப்பட்டது.
அய்யாற்றில் வெள்ளப்பெருக்கு
உப்பிலியபுரம் அருகே புளியஞ்சோலை மற்றும் கொல்லிமலை பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அய்யாற்றை நீராதாரமாக கொண்ட கோட்டப்பாளையம், வைரிசெட்டிப்பாளையம், ஜம்பேரி, சிறுநாவலூர் ஏரி, பி.மேட்டூர், பாப்பான் குட்டைஏரி, ஆலத்துடையான்பட்டி சின்ன ஏரி, பெரிய ஏரி, ரெட்டியாப்பட்டி ஏரி ஆகிய ஏரிகள் நிரம்பி வழிகின்றன.
போக்குவரத்து பாதிப்பு
ரெட்டியாப்பட்டியிலுள்ள தரைப்பாலம் பலவீனமடைந்ததால் புதியபாலம் கட்டுவதற்காக தற்காலிக சாலை அமைக்கப்பட்டு இருந்தது. ஏரியில் நீர்வரத்து அதிகமானதால், நேற்று முன்தினம் இரவு மண் அரிப்பு ஏற்பட்டு தற்காலிக சாலை அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையை சீரமைத்தனர். அதன்பின் நேற்று மாலை முதல் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.
தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்
இந்தநிலையில் உப்பிலியபுரம் பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழையால் இரண்டாம் பருவ நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் அறுவடைப் பணிகளில் தேக்கம் ஏற்படுவதுடன் மகசூலில் பாதிப்பு எற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.