சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்
சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்
திருவோணம் அருகே அம்பேத்கர் விளம்பர தட்டியை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி சாலைமறியல் நடந்தது. இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலைமறியல்
திருவோணத்தை அடுத்துள்ள கந்தர்வகோட்டை- பட்டுக்கோட்டை பிரதான சாலையோரத்தில் புதுவிடுதி மேலத்தெருவிற்கு செல்லும் பிரிவு சாலை அருகே அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி விளம்பர தட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பர தட்டி மீது மர்மநபர்கள் தக்காளியை வீசி, தட்டியை கிழித்து சேதப்படுத்தினர். இதனை அறிந்த கிராமமக்கள் நேற்று இரவு அம்பேத்கர் விளம்பர தட்டியை சேதப்படுத்திய நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர்.
1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவோணம் போலீசார் மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விளம்பர தட்டியை சேதப்படுத்தியவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.