காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

அருப்புக்கோட்டையில் குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-25 20:33 GMT

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் வினியோகம்

அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் தாமிரபரணி மற்றும் வைகை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக கடும் வறட்சி காரணமாக நகராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நகராட்சிக்குட்பட்ட 16-வது வார்டு திருநகரத்தை சேர்ந்த பொதுமக்கள் எங்கள் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வினியோகம் செய்யபடவில்லை என புகார் தெரிவித்து விருதுநகர் சாலையில் காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நெசவாளர்கள் அதிகம் வாழும் பகுதியில் குடிநீரை சேமித்தும் பயன்படுத்த முடியவில்லை. தினமும் விலை கொடுத்து குடிநீரை வாங்க முடியவில்லை.

குடிநீர் வராமல் மிகவும் சிரமமான சூழலில் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்