ஊத்துக்குளி
ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளி ஊராட்சி பகுதியில் குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி காலி குடத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
செங்கப்பள்ளி ஊராட்சி 6-வது வார்டு பாசங்காட்டுபாளையம் லட்சுமி நகர், ராதா நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.
இப்பகுதி பொதுமக்களின் குடிநீர் சேவையை பூர்த்தி செய்ய ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினமும் 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டிய நிலையில் போதுமான குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும் குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை.
எனவே சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி போலீசார் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், வருவாய்த் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை
அப்போது அதிகாரிகளிடம் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கூறும்போது " இந்த பகுதியை சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்கிறார்கள். இந்த நிலையில் குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படாத காரணத்தினால் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பணிக்கு செல்வது சிரமமாக உள்ளது. எனவே சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இதையடுத்து விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.