தளி,
ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற கட்டளை மாரியம்மன் கோவில் உள்ளது.கோவிலில் செவ்வாய், வியாழன், ஞாயிறு, அமாவாசை உள்ளிட்ட நாட்களில் கட்டளை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.கோடந்தூர் மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் பூஜை செய்து வருகின்றனர்.இதில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அந்த வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமையை யொட்டி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் கலந்து கொள்வதற்காக கார், பைக், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான பொதுமக்கள் சின்னாறு சோதனைச் சாவடிக்கு வருகை தந்தனர்.அதன் பின்னர் வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் கோவிலுக்கு சென்றனர். பின்னர் சின்னாறில் குளித்துவிட்டு கட்டளை மாரியம்மனை சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்தனர்.அப்போது உடுமலை - மூணாறு சாலை வழியாக மூணாறில் இருந்து பழனி செல்வதற்காக வந்த அரசு பஸ் நிற்காமல் சென்று விட்டது.மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்சும் இயக்கவில்லை. இதனால் பொதுமக்கள் வீட்டுக்கு திரும்பிச் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளானார்கள்.அதைத் தொடர்ந்து ஆவேசமடைந்த பொதுமக்கள் உடுமலை- மூணாறு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கட்டளை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது என்பதால் கூட்டம் அதிக அளவில் வருகிறது.அதற்கு தகுந்தவாறு பஸ் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதில்லை.உடுமலை மூணாறு சாலை வழியாக செல்கின்ற அரசு பஸ்சும் நிற்பதில்லை. இதனால் வீட்டுக்கு திரும்பி செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றோம். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசு பஸ்சை நிறுத்தி செல்லுமாறு டிரைவர் கண்டக்டருக்கு அறிவுறுத்தியும், சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.