ஓசூர்
ஓசூரில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.
தி.மு.க. பிரமுகர்
ஓசூர் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் முனிசந்திரன் (வயது 52). தி.மு.க. பிரமுகர். பெட்டி கடை வைத்து இருந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி மாதேவி உடன் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
பேரண்டப்பள்ளி அருகே கார் வந்த போது முன்னால் சென்ற லாரியை டிரைவர் மகேந்திரன் (30) முந்தி செல்ல முயன்றார். அப்போது லாரியின் பின்னால் கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த முனிசந்திரன் இறந்தார். அவரது மனைவி மாதேவி, டிரைவர் மகேந்திரன் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கார் மோதி பலி
ஓசூரில் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று முன்தினம் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து சென்னத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.