குண்டும்,குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

உடுமலையில் ராமசாமி நகர் ரெயில்வே கேட் பகுதியில், சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Update: 2022-06-30 18:07 GMT

உடுமலையில் ராமசாமி நகர் ரெயில்வே கேட் பகுதியில், சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ராமசாமிநகர் ரெயில்வே கேட்

உடுமலை ரெயில் நிலையத்தை அடுத்துள்ள உழவர் சந்தைக்கு அருகில் ராமசாமி நகருக்கு செல்லும் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டிற்கு தெற்கு பகுதியில் ராமசாமி நகர், சவுதாமலர் லே-அவுட், ருத்ரப்பாநகர், அன்னபூரணி நகர், பழனியாண்டவர் நகர், கிரீன் பார்க் லே-அவுட், ஜீவாநகர் உள்ளிட்ட பல குடியிருப்பு பகுதிகள் உள்ளன. உடுமலை மத்திய பஸ் நிலைய சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து எலையமுத்தூர் சாலையில் உள்ள ஆர்.டி.ஓ.அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகம், அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட அலுவலகங்கள் மற்றும் பல்வேறு இடங்களுக்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் சென்று வருகிறவர்கள் இந்த ரெயில்வே கேட் வழியாக சென்று வருகின்றனர்.

பள்ளி வாகனங்கள், மினி பஸ்கள், ஆட்டோக்கள், கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவையும் சென்று வருகின்றன. இந்த ரெயில்வே கேட்டிற்கு தெற்குபுறத்தில் உள்ள குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் சில கிராமபுறங்களைச் சேர்ந்தவர்கள் பள்ளி, கல்லூரி, சந்தை, கடைகள், மருத்துவமனைகள், பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கும், வேலைகளுக்கும் பெரும்பாலும் இந்த ரெயில்வே கேட் வழியாகத்தான் சென்று வருகின்றனர்.

குண்டும், குழியுமான சாலை

அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில், ரெயில்வே கேட் பகுதி மற்றும் அதற்கருகில் உள்ள பகுதியில் சாலை ஆங்காங்கு பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அதனால் அந்த இடத்தில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ரெயில்வே கேட் பகுதியிலும் தண்டவாளத்திற்கு அருகில் இரண்டு புறமும் சாலைப்பகுதிகள் சேதமடைந்துள்ளன. அதனால் வாகன ஓட்டுனர்கள் அந்த இடத்திலும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

ரெயில் போக்குவரத்திற்காக கேட் மூடப்பட்டிருக்கும் நேரங்களில் கேட்டின் இரண்டு புறமும் வாகனங்கள் அதிகம் நின்றிருக்கும்.ரெயில் சென்றபிறகு கேட்டை திறந்ததும் இரண்டு புறங்களில் இருந்தும் வாகனங்கள் எதிர்எதிரே செல்லும்போது குண்டும் குழியுமான இடத்தில் இருசக்கரவாகன ஓட்டுனர்கள் மிகவும் தடுமாறுகின்றனர்.

சீரமைக்க எதிர்பார்ப்பு

தண்டவாளம் அருகே சாலை பழுதடைந்திருப்பதால், ரெயில் போக்குவரத்திற்கு பாதிப்பில்லை. அதேசமயம் ரெயில்வே கேட் திறந்திருக்கும் போது சாலையில் வாகனங்களில் செல்கிறவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதனால் ரெயில்வே கேட் பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்