விபத்தை தடுக்க சர்வீஸ் ரோடு அமைக்க கோரிக்கை

காரைக்குடி பை-பாஸ் சாலையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு கார் மற்றும் லாரிகளை சாலையோரத்தில் நிறுத்தி வைப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிழப்பு சம்பவம் நடந்து வருகிறது. எனவே இந்த விபத்தை தடுக்க சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-06-11 19:28 GMT

காரைக்குடி,

காரைக்குடி பை-பாஸ் சாலையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு கார் மற்றும் லாரிகளை சாலையோரத்தில் நிறுத்தி வைப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிழப்பு சம்பவம் நடந்து வருகிறது. எனவே இந்த விபத்தை தடுக்க சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிக்கடி விபத்து

காரைக்குடி வேகமாக நகராக உருவாகி வருவதால் நகரின் மையப்பகுதியில் வாடகை கட்டிடத்தில் இருந்து பல்வேறு அரசு அலுவலகங்கள் தற்ேபாது காரைக்குடி வழியாக செல்லும் திருச்சி-ராமேசுவரம் பை-பாஸ் சாலையோரத்தில் உள்ள அரசு இடங்களில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு அங்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி ஏற்கனவே காரைக்குடி பழைய மருத்துவமனையில் இருந்த தீயணைப்பு நிலையம் தற்போது காரைக்குடி வழியாக செல்லும் பைபாஸ் சாலையோரத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அங்கு செயல்பட்டு வருகிறது. அதேபோல் ஒருங்கிணைந்த பத்திர பதிவு அலுவலகம் என்ற பெயரில் இயங்கி வருகிறது.

இவ்வாறு அந்த பைபாஸ் பகுதியில் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் அங்கு வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டவர்கள் மோட்டார் சைக்கிள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

உயிர்பலி

மேலும் இந்த பத்திர பதிவு அலுவலகம் முன்பு செல்லும் பைபாஸ் சாலையோரத்தில் எவ்வித சர்வீஸ் ரோடும் இல்லை. இதனால் அங்கு பல்வேறு தேவைக்காக வாகனங்களில் வரும் நபர்கள் பத்திர பதிவு அலுவலகம் எதிரே செல்லும் பைபாஸ் சாலையோரத்தில் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

இதுதவிர சில கனரக லாரிகளின் டிரைவர்களும் தங்களது லாரிகளை இந்த பைபாஸ் சாலையோரத்தில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதன் காரணமாக இந்த பைபாஸ் சாலையில் ராமேசுவரம் மற்றும் திருச்சி செல்லும் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன.

இவ்வாறு அவர்கள் செல்லும்போது சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கார், லாரிகளின் பின்புறமாக வந்து அசுர வேகத்தில் மோதும் நிலை ஏற்பட்டு உயிர்பலி ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே 5 முறை இவ்வாறு விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்றும் இதேபோல் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரியின் பின்புறத்தில் வேகமாக வந்த வேன் மோதியதில் 3 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

கோரிக்கை

இவ்வாறு தொடர்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவம் இந்த பகுதியில் நடந்து வருவதால் இந்த அலுவலகம் முன்பு சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். அதேபோல் புதிய பயணிகள் நிழற்குடையும் கட்டி இந்த பைபாஸ் சாலையில் சாலை ரோந்து போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்