10 நாட்களாக வாழைத்தோப்புகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் அவலம்

திருவையாறு அருகே 10 நாட்களாக வாழைத்தோப்புகளில் தண்ணீா் தேங்கி நிற்பதால் வாழை பயிர்கள் நாசமடைய தொடங்கி உள்ளது. எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-08-13 20:52 GMT

திருக்காட்டுப்பள்ளி;

திருவையாறு அருகே 10 நாட்களாக வாழைத்தோப்புகளில் தண்ணீா் தேங்கி நிற்பதால் வாழை பயிர்கள் நாசமடைய தொடங்கி உள்ளது. எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி டெல்டா பாசனத்துக்காக முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மே மாதத்திலேயே தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஜூலை மாத மாதம் 11-ந் தேதியிலிருந்து வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியது. கர்நாடகத்திலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால் மேட்டூர் அணை நிரம்பியது. மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் முழுவதும் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டது. சற்றே குறைந்து இருந்த நீர்வரத்து மீண்டும் இந்த மாதம் முதல் தேதியில் இருந்து அதிகரிக்க தொடங்கியது. முக்கொம்பிலிருந்தும் கல்லணையிலிருந்தும் கொள்ளிடத்தில் பெருகி ஓடிய தண்ணீர் தாழ்வான பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் வாழை, நெல், கரும்பு, செங்கல்சூளைகளை சூழ்ந்தது.

வாழைமரங்கள் நாசம்

தொடர்ந்து கொள்ளிடத்தில் தண்ணீர் பெருகி ஓடிக் கொண்டிருப்பதால் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் தண்ணீர் வடியாமல் விவசாயிகளுக்கு அதிக இழப்பை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது. திருவையாறு அருகே உள்ள வடுகக்குடி, ஆச்சனூர், மருர், ஆகிய இடங்களில் கொள்ளிட கரையோரம் பயிரிடப்பட்டிருந்த வாழை தோப்புகளுக்குள் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சூழ்ந்தது. தற்போது கொள்ளிடத்தில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நிலையிலும் கடந்த 10 நாட்களாக ஒரு சில பகுதிகளில் தற்போது வரை வாழை தோப்புகளில் தண்ணீர் சூழ்ந்தே காணப்படுகிறது.

இழப்பீடு

இந்த பகுதியில் பயிர் செய்யப்பட்டுள்ள ஏறக்குறைய 200 ஏக்கருக்கு மேலான வாழை தோப்புகளில் தண்ணீர் சூழ்ந்த நிலையில், 10 நாட்களாக 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள வாழை மரங்கள் இன்னமும் தண்ணீர் சூழ்ந்து நிரம்பி காட்சியளிக்கிறது.இதனால் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வந்து வாழைத்தோப்புகளை பார்வையிட்டு சென்றுள்ளனர். தண்ணீர் வடிந்த பிறகு இழப்பு குறித்து கணக்கெடுக்கப்படும் என்று தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறியதாக விவசாயிகள் கூறுகின்றனர். எனவே தகுந்த இழப்பீட்டை விரைவில் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்