செம்மண் கொள்ளையால் வனவளம் பாதிக்கும் அபாயம்

கல்வராயன்மலை அடிவாரத்தில் செம்மண் கொள்ளையால் வனவளம் பாதிக்கும் அபாயம்

Update: 2023-01-01 18:45 GMT

கல்வராயன்மலை

கல்வராயன்மலை பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவுடன் கூடிய அடர்ந்த வனப்பகுதியாகும். கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் பகுதியாகவும் உள்ள கல்வராயன்மலையின் 25 ஆயிரம் சதுரகிலோ மீட்டர் பரப்பளவு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது. இங்கு 171 கிராமங்களில் மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். மேலும் வனப்பகுதிகளில் வன விலங்குகள், பறவைகளும் வசித்து வருகின்றன. அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் அங்குள்ள நீரோடைகளில் வழிந்தோடும் தண்ணீர் மற்றும் சில வகை பொருட்களை பயன்படுத்தி மர்ம நபர்கள் சாராயம் காய்ச்சி கடத்தி வரும் சம்பவமும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

அடுத்து துப்பாக்கி, கம்பு, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களுடன் அத்துமீறி நுழையும் மர்ம நபர்கள் மான், முயல்போன்ற வன விலங்களையும், மயில், காட்டுப்புறா போன்ற சில பறவைகளையும் வேட்டையாடி வருவதால் அவைகள் புகலிடம் தேடி வனப்பகுதியை விட்டு அருகில் உள்ள கிராமங்களுக்குள் தஞ்சம் புகுந்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க மலைஅடி வாரப்பகுதியில் உள்ள செம்மண்ணை மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்வது தற்போது வாடிக்கையாக நிகழ்ந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள பொட்டியம், மாயம்பாடி, கல்படை, எடுந்தவாய்நத்தம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் லாரிகள், பொக்லைன் எந்திரங்களுடன் வரும் மர்ம நபர்கள் பொக்லைன் எந்திரம் முலம் செம்மண்ணை அள்ளி லாரிகளில் கடத்தி பணம் சம்பாதித்து வருகின்றனர். இதை யாரும் கண்டுகொள்ளாததால் பூமிக்கு அடியில் அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி செம்மண் எடுத்து வருகின்றனர். இதனால் அருகில் உள்ள மரங்களின் வேர்கள் பிடிமானத்தை இழந்து சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. இந்த நிலை நீடித்தால் வானுயர வளர்ந்து நிற்கும் மரங்கள் அனைத்தும் கீழே சாய்ந்து விடும். பின்னர் மணல்கொள்ளை அடிப்பது போன்று சாய்ந்த மரங்களை வெட்டி லாரியில் போட்டு மணலால் மூடி அதையும் கடத்தி செல்வதற்கு மர்ம நபர்களுக்கு எளிதாக இருந்து விடும் என்பதால் வன வளத்தை பாதுகாக்க செம்மண் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், ஏற்கனவே சாராயம் காய்ச்சும் கும்பல் விறகுக்காவும், சாராயம் காய்ச்சுவதற்காவும் மரங்களை வெட்டு கின்றனர். இதனால் வனப்பகுதியில் உள்ள மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது மணல் கொள்ளை மாபியாக்கள் அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி செம்மண்ணை கடத்தி செல்வதால் மரங்களின் வேர் பகுதி பிடிமானத்தை இழந்து சாய்ந்து விழும் அபாய நிலை உள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட வருவாய்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் அவர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால் மணல் கொள்ளை கும்பலுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. மண்வளத்தை பாதுகாப்போம், வனவளத்தை காப்போம் என அதிகாரிகள் ஊர் ஊராக சென்று மக்களுக்கு உபதேசம் செய்து வருகிறார்கள். ஆனால் இங்கே இயற்கை வளம் அழிந்து கொண்டு வருகிறது. இதை தடுக்க யாரும் நடவடிக்கை எடு்க்கவில்லை என்கிறபோது மன வேதனையாக உள்ளது. எனவே வனவளத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் செம்மண் கொள்ளையை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்