ரிக் தொழில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பாதிப்பு
ரிக் தொழில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பாதிப்பு
நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க மனிதன் முதல் பறவைகள், விலங்குகள் என அனைவருக்கும் நீரின் தேவை அதிகமாக உள்ளது. பொதுமக்கள் தங்கள் இல்லங்களுக்கும், விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை ரிக்போர் மூலம் எடுத்துக் கொள்கிறார்கள். ரிக் தொழிலில் இந்திய அளவில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு முதலாவது இடத்திலும், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் இரண்டாவது இடத்திலும் உள்ளது. ரிக் உற்பத்தியில் குன்னத்தூர் இந்தியாவில் முதலாம் இடத்தில் உள்ளது. ஆனாலும் ரிக் தொழில் மிகவும் மந்தமாகி விட்டது. இதற்கு காரணம் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதாகும். ஆனாலும் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான கட்டணத்தை உயர்த்த முடியவில்லை. இதனால் தொழில் நலிவடைந்து போனது. குன்னத்தூரில் செயல்படும் ஒர்க் ஷாப்பில் வேலைகள் இல்லை. குன்னத்தூரில் உள்ள ஒர்க் ஷாப்புகள் திறக்கப்படுவதே இல்லை. ஏதேனும் அவசர வேலை இருந்தால் மட்டுமே தற்காலிக பணியாளர்கள் வந்து வேலை செய்கிறார்கள். இதனால் தொழில் சார்ந்த ஆயில் கடைகளில் வியாபாரம் நின்றுவிட்டது. இதைச் சார்ந்த உதிரிபாகங்கள் விற்கும் கடைகளிலும் வியாபாரம் குறைந்துபோனது. இதை நம்பி வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
ஆழ்துளை கிணறு
ரிக் போர்வெல் வேலை முடிந்தவுடன் பி.வி.சி. கேசிங் குழாய் போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் விலை அதிகமாக உள்ளதால் ஒரு சில தண்ணீரில்லாத போர்களில் பி.வி.சி.கேசிங் குழாய் வேண்டாம் என்கிறார்கள். இதனால் அந்த குழாயை வெளியே எடுக்கும்போது பெரிய துளை ஏற்படுகிறது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. போர் போட்டவுடன் கேசிங் குழாயை யாரும் எடுக்கக்கூடாது என்று அரசு சட்டம் இயற்ற வேண்டும். மேலும் இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அரசிடம் அனுமதி பெற்ற ரிக் வண்டி மூலம் மட்டுமே போர் போட வேண்டும்.உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பது அவசியம். போர் போடுபவர்கள் ஊராட்சியிடம் உரிய அனுமதி பெறுவது முக்கியமாகும்.
போர்வெல் வேலைக்கு வட இந்திய தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் 6 மாத காலம் வேலைக்கு வருகிறார்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் அவர்களும் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். தொடர்ச்சியாக வேலை இல்லாததால் அதிக தொழிலாளர்கள் வைத்திருந்தால் அவர்களுக்கு சம்பளம் வழங்குவது கஷ்டமாகும்.
நேரத்திற்கு குளிக்க முடியாது
இதே தொழிலை நம்பி உள்ள டிரைவர், ட்ரில்லர் போன்றவர்களுக்கு சரியான வேலை இல்லை.ரிக் தொழிலைப் பொறுத்தவரை வடமாநிலத்தவர்களே அதிக அளவில் பணியில் உள்ளனர். தமிழர்களைப் பொறுத்தவரை நாகரிகம் பார்ப்பதால் இந்த ரிக் தொழிலுக்கு யாரும் வருவதில்லை. குறிப்பிட்ட நேரத்துக்கு குளிக்க முடிவதில்லை. மேலும் சாப்பிட முடியவில்லை போன்ற பல்வேறு பிரச்சினையால் தமிழர்கள் யாரும் ரிக் தொழிலில் ஈடுபடுவதில்லை.
இந்த தொழில் குறித்து ரிக் உரிமையாளர் வள்ளிபுரம் பிரபாகரன் கூறியதாவது:-
பின்னலாடை துறையில் மந்த நிலை காரணமாக ரியல் எஸ்டேட் தொழில் மோசமானது. இதனால் வீட்டுமனை வாங்குவது குறைந்து விட்டது. வங்கிகளில் வீடு கட்ட கடன் கொடுக்காததால் அதிக அளவில் வீடுகள் கட்டப்படுவதில்லை. புதிய வீடுகள் கட்டினால்தான் எங்களுக்கு வேலை கிடைக்கும். அவினாசியில் இருந்து ஈரோடு வரை அவினாசி-அத்திக்கடவு திட்டம் வருவதால் நிலத்தடி நீரின் அளவு அதிகரிக்கும். . இதனாலும் ெதாழில் குறைந்து விட்டது. ரிக் வண்டிகள் பெரும்பாலானவை முகூர்த்த நாளில் மட்டுமே இயங்குகிறது. மாதத்தில் 10-ல் இருந்து 15 நாட்கள் மட்டுமே ரிக் வண்டிகள் இயங்குகிறது. இந்தியா முழுவதும் குன்னத்தூர் மற்றும் திருச்செங்கோடு பகுதியில் இருந்து ரிக் வண்டிகள் இயங்கிக் வருகிறது.
இது குறித்து ரிக் வண்டி உரிமையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
மூர்த்தி (திருப்பூர் மாவட்ட உரிமையாளர்கள் சங்கத்தலைவர்):-
மத்திய அரசு உயர்த்தி உள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாகவும், தற்போது நிலவி வரும் வடமாநிலத்தவர்களின் தாக்குதல் வதந்தி, வீடியோ காரணமாகவும் ரிக் தொழில் மிகவும் மந்தமாகவே உள்ளது. 40 ஆண்டு காலம் இல்லாத அளவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நிலை நீடிக்கிறது. 50 போர் போடும் இடத்தில் தற்பொழுது 10 போர்களே போடப்படுகிறது.
பெரியசாமி (கோவை, ஈரோடு, திருப்பூர் ரிக் உரிமையாளர்கள் சங்க தலைவர்):
மத்திய அரசு உடனடியாக டீசல் விலையை குறைத்து ரிக் தொழிலை மீட்டெடுக்க வேண்டும்
ரிக் தொழிலில் உள்ள இடைத்தரகர்கள் செயல்பாட்டை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈஸ்வரமூர்த்தி (திருப்பூர் மாவட்ட உரிமையாளர் சங்க செயலாளர்):
மழை அதிக அளவு பெய்ததால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. அதனால் தற்போதைய தேவைக்கு விவசாய கிணற்றில் அதிக நீர் உள்ளது. மேலும் வீடுகளில் குறைந்த நேரத்திலேயே தண்ணீர் நிரம்பி விடுகிறது. உரிமையாளர்களின் போட்டியால் கொரோனாவுக்கு பிறகு வண்டி வாங்கியதன் தவணைத் தொகையை செலுத்துவதற்கு உரிமையாளர்கள் குறைந்த விலையில் போர் போடுவதால் தொழிலில் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. உதிரி பாகங்களின் விலை ஏற்றம், தொழிலாளர்களின் சம்பள உயர்வு என இவைகளாலும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் புதிய தொழிலாளர்கள் யாரும் இந்த வேலைக்கு வர மறுக்கிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-----