ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்;சார்பதிவாளருக்கு நீதிமன்றம் உத்தரவு
ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சார்பதிவாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பத்திரம் பதிவு செய்ய...
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா வேப்பூர் அருகே உள்ள நன்னை கிராமம் மேற்குத்தெருவை சேர்ந்தவர் செங்கமலை(வயது 65). இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சொந்தமான நிலம் பெரம்பலூர் தாலுகா எசனை கிராமத்திலும், குன்னம் தாலுகா ஓலைப்பாடியிலும் உள்ளது. இந்நிலையில் அவர், தனக்கு சொந்தமான இருவகையான சொத்துக்களையும் தனது மனைவி சத்யா பெயருக்கு உயில் சாசன கிரையம் செய்வதற்காக செங்கமலை வேப்பூர் பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கு சார்பதிவாளரிடம் உயில் பத்திரப்பதிவு செய்வதற்காக மனு அளித்து, அதற்குரிய கட்டணத்தையும் பத்திரப்பதிவு துறைக்கு செலுத்தியிருந்தார். ஆனால் சார் பதிவாளர் அவரது உயில் பத்திரத்தை பதிவு செய்யாமல், பாகப்பிரிவினை மூலம் செங்கமலை பெற்ற சொத்தின் பத்திரத்தில் உள்ள நில அளவிற்கும், தற்போது உயில் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அளவிற்கும் வித்தியாசம் உள்ளது என்று கூறியதாக தெரிகிறது. மேலும் 1999-ம் ஆண்டு ஓலைப்பாடியில் கிரையம் பெற்றுள்ள நிலத்தின் ஒரு பகுதி பதிவு செய்யப்படவில்லை என்று கூறி, உயில் பத்திரத்தை பதிவு செய்யாமல் காலம் கடத்தியதாக கூறப்படுகிறது.
வழக்கு
இதைத்தொடர்ந்து செங்கமலை தனது சொத்தின் மீது அதற்கு முன்பு இருந்த வில்லங்கத்தையும், பதிவு செய்யாமல் விடுபட்டிருந்த ஒரு பகுதியையும் திருத்தம் செய்து பதிவு மூலம் சரி செய்த பின்னர், செங்கமலை வேப்பூர் சார் பதிவாளரிடம் மீண்டும் முறையிட்டார். ஆனால் வேப்பூர் சார்பதிவாளர் உயில் பத்திரப்பதிவிற்கான ஆவணத்தை முறைப்படி பதிவு செய்யாமல் செங்கமலையை அலையவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த செங்கமலை, தனது வக்கீல் கே.ஆர்.சிவம் மூலம் வேப்பூர் சார்பதிவாளர் மற்றும் அரியலூர் மாவட்ட பதிவாளர் ஆகியோர் மீது 2018-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் மனுதாரரின் மனுவை அனுமதித்து, இருதரப்பிலும் விசாரணை நடத்தினர்.
நிவாரண தொகை
இதில் செங்கமலையின் மனுவின் மீது உரிய தீர்வு காணாமல் சேவைக்குறைபாடு காரணமாக அவரை அலையவிட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக ரூ.30 ஆயிரம் நிவாரண தொகையும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரமும் வேப்பூர் சார் பதிவாளர் செங்கமலைக்கு வழங்க வேண்டும் என்றும், தமிழ்நாடு முத்திரைத்தாள் சட்டம் மற்றும் பதிவு சட்டத்திற்கு உட்பட்டு மனுதாரரின் உயிலை பதிவு செய்திடவும் சார் பதிவாளருக்கு உத்தரவிட்டனர். மேலும் 2-வது எதிர்மனுதாரரை இந்த வழக்கில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டனர்.