ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள்

Update: 2023-08-02 19:00 GMT

பரமத்திவேலூர்:

ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் மோட்ச தீபம், பரிசல் போட்டி நடத்த பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாடுகள்

ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வேலூர், ஜேடர்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றுக்கு சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் தங்களது குலதெய்வ கோவில்களில் உள்ள ஆயுதங்களை கொண்டு வருவது வழக்கம். பின்னர் காவிரி ஆற்றில் ஆயுதங்களை சுத்தம் செய்து வழிபட்டு, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துவர். மேலும் கன்னிமார் வழிபாடு செய்து திருமணமாகாத பெண்களுக்கு பூஜையில் வைத்து படைக்கப்பட்ட மஞ்சள் கயிறு, துணிகள் வழங்கியும், புதுமண தம்பதிகள் குழந்தைகளுக்கு மஞ்சள் கயிறு வழங்கியும் வழிபாடு நடத்துவார்கள். மாலையில் நடைபெறும் மோட்ச தீபம் மற்றும் பரிசல் போட்டியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வருவர்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவும், பூஜைகள் நடத்தவும் மாவட்ட நிர்வாகம், போலீசார் மற்றும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்திருந்தனர். தற்போது காவிரி ஆற்றில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்வதால் பூஜைகள் நடத்தவும், பரிசல் போட்டி நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தினர் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்துள்ளனர்.

ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம்

இதுகுறித்து பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி கூறுகையில், பரமத்திவேலூர் வட்டார காவிரி கரையோர பொதுமக்கள் ஆடி 18 பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். காவிரி ஆற்றில் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டாம். குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டும். வேலூர் காவிரி ஆற்றுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் வாகனங்களை காசி விஸ்வநாதர் கோவில் வரை செல்லக்கூடாது.

காவிரி ஆற்றுக்கு செல்லும் பாதையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை மீறி செல்லக்கூடாது. மோட்ச தீபம் விடும்போதும், பரிசல் போட்டியில் கலந்து கொள்வோரும் போதிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பாதுகாப்பு கருதி காவிரி கரையோரத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு மீட்பு குழுவினர் மற்றும் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்