கிராமசபை கூட்டத்தில் ராஜினாமாகடிதம் கொடுத்த வார்டு உறுப்பினரால் பரபரப்பு

மேலதிருச்செந்தூர் பஞ்சாயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ராஜினாமா கடிதம் கொடுத்த வார்டு உறுப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-26 18:45 GMT

திருச்செந்தூர்:

மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில், தனது வார்டில் எவ்வித அடிப்படை வசதியும் செய்து தராததை நிர்வாகத்தை கண்டித்து வார்டு உறுப்பினர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வார்டு உறுப்பினர் திடீர் ராஜினாமா

திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட மேலத் திருச்செந்தூர் பஞ்சாயத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் மகாராஜா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியவுடன், பஞ்சாயத்து 8-வது வார்டு உறுப்பினர் சுதா திடீரென்று தலைவரிடம் சென்று தனது வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதத்தை கொடுத்தார். அந்த கடிதத்தில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் எனது வார்டில் எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. பஞ்சாயத்து நிர்வாகம் தொடர்ந்து எனது வார்டு பகுதியை புறக்கணித்து வருவதை கண்டிப்பதாக, சுட்டிக் காட்டியிருந்தார். கடிதத்தை கொடுத்து விட்டு உறுப்பினர் கூட்டத்தை விட்டு வெளியேறி சென்றார். இதனால் கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தலைவர் விளக்கம்

இதுகுறித்து மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்து தலைவர் விளக்கம் அளித்த வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பஞ்சாயத்து 8-வது வார்டு நா.முத்தையாபுரம் பகுதி உறுப்பினர் சுதா தன்னுடைய பகுதிக்கு எந்த அடிப்படை வசதியும் செய்யது தரவில்லை என கிராம சபை கூட்டத்தில் தனது பதவியை ராஜினமா செய்வதாக மனு கொடுத்துள்ளார். இதுவரை அந்த பகுதிக்கு ரூ.1 கோடியே 52 லட்சத்து 27 ஆயிரத்துக்கு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி போன்றவை மிகவும் சிறப்பாக உள்ளது. அதேபோல் எந்த ஒரு பொதுமக்கள் பிரச்சினையாக இருந்தாலும் மக்களோடு மக்களாக நின்று சரி செய்து கொடுத்து வந்துள்ளேன். இந்த நிலையில் அவர் பொய்யான குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது முற்றிலும் தவறானது, என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்