தலைவர், துணை தலைவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ராஜினாமா

வடக்குத்து ஊராட்சியில் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்ட தலைவர், துணை தலைவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம் என்று கலெக்டர் அலுவலகத்தில் உறுப்பினர்கள் மனு அளித்தனர்.

Update: 2023-07-31 18:45 GMT

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் வடக்குத்து ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் 6 பேர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரனிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

முறைகேடு

வடக்குத்து ஊராட்சியில் தலைவர், துணை தலைவர் இருவரும் அடிப்படை மற்றும் வளர்ச்சி பணிகளை சரிவர மேற்கொள்வது இல்லை. நாங்கள் உறுப்பினர்களாக பதவி ஏற்ற நாள் முதல் வார்டு சார்ந்த எந்த பிரச்சினைகுறித்தும் ஊராட்சி மன்ற கூட்டத்தில் விவாதிப்பதில்லை. ஊராட்சி வரவு-செலவு கணக்குகளையும் காட்டுவதில்லை. இது தவிர நடைபெறாத பணிகள் பலவற்றை முடித்ததாக கணக்கு எழுதி லட்சக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது. ஆகவே ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் மூலம் பணப்பரிமாற்றத்தை நிறுத்த வேண்டும்.

ராஜினாமா

ஆகவே ஊராட்சி மக்கள் நலனில் அக்கறை இல்லாத தலைவர் மற்றும் துணை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும். இவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க ஊராட்சி மன்ற கூட்டத்தை கூட்டவும், இந்த விவகாரம் குறித்து உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் எங்கள் பதவியை ராஜினாமா செய்வோம்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்