விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பொதுமக்கள்: திருவண்ணாமலையில் பரபரப்பு

சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி மற்றும் குடும்பத்தினரை வீட்டுக்குள் வைத்து பொதுமக்கள் பூட்டினர்.

Update: 2024-05-07 04:14 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் விஜய் முருகன் (வயது 40). இவர் நடிகர் விஜய் ரசிகர் மன்ற ஆரணி நகர தலைவராக இருந்து வந்தார். தற்போது தமிழக வெற்றிக்கழக ஆரணி தொகுதி தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அந்தப்பகுதியில் உள்ள பெண்களிடமும், சிறு வியாபாரிகளிடமும் மாத சீட்டு, வார சீட்டு, தினச்சீட்டு என கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சீட்டுகள் நடத்தி வந்துள்ளார்.

ஆனால், சீட்டு கட்டி முடித்தவர்களுக்கு பணம் தராமல் ஏமாற்றிவந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டு பொறுமை இழந்த பொதுமக்கள், விஜய் முருகன் வீட்டு முன்பு நேற்று குவிந்தனர். அத்துடன் அவரது வீட்டின் கேட்டிற்கு 7 பூட்டுகள் போட்டு பூட்டியுள்ளனர். சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த விஜய் முருகன், என்னை உள்ளே வைத்து பூட்டு போட்டது யார் என கேட்டு கூச்சலிட்டுள்ளார்.

இந்த தகவல் குறித்து அறிந்த ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கேட்டில் பூட்டப்பட்டு இருந்த 7 பூட்டுகளையும் உடைத்து, வீட்டிற்குள் இருந்த விஜய் முருகன், அவரது தாய் மற்றும் 2 குழந்தைகள் என 4 பேரை மீட்டனர். பின்னர் சீட்டுப்பணம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் போலீசார் சமரசபேச்சு நடத்தி, ஆரணி நகர போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறும்போது, நாங்கள் சீட்டு பணம் கட்டி முடித்து பல மாதங்கள் ஆகிறது. எங்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் தற்போது கூட, விஜய் முருகன் புதியதாக சொத்து வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாங்கள் அவரது வீட்டுக்கு பூட்டு போட்டோம். மேலும், கடந்த 2022-ம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் இந்த முடிவுக்கு வந்தோம் என்றனர்.

அப்போது போலீசார், கோடிக்கணக்கில் பணம் மோசடி நடந்து இருப்பதால், மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் தான் புகார் செய்ய வேண்டும் என்றும், வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் அளிக்குமாறு பொதுமக்களிடம் கூறிஅனுப்பி வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்