இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு பா.ம.க. சார்பில் அஞ்சலி

இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு பா.ம.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2022-09-17 18:55 GMT

அரியலூர் பஸ் நிலையம் அருகே பா.ம.க. சார்பில், இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இட ஒதுக்கீடு போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் பலியான 21 பேரின் படங்களுக்கு மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமையில் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

இதேபோல் ஜெயங்கொண்டத்தில், இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இதில் கட்சியின் முன்னாள் மாநில துணை பொது செயலாளர் டி.எம்.டி.திருமாவளவன், ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பரசுராமன் ஆகியோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த 21 தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் நகர தலைவர் ரங்கநாதன், ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கழுவந்தோண்டி பஸ் நிறுத்தத்திலும், மலங்கண்குடியிருப்பு கிராமத்திலும் தியாகிகள் படத்திற்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏந்தி வீர வணக்கம் செலுத்தப்பட்டது. வன்னியர் சங்க முன்னாள் மாநில செயலாளர் வைத்தி, பா.ம.க. முன்னாள் நகர செயலாளர் மாதவன்தேவா ஆகியோர் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு எதிரே வைக்கப்பட்டிருந்த தியாகிககள் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிகளில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர். மாவீரன் மஞ்சள் படை மாவட்ட செயலாளர் சூரியமணல் குமார் தலைமையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையொட்டி ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்