படகுகள் மூலம் கிராம மக்கள் மீட்பு
கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் படகுகள் மூலம் கிராம மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
அவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர், கொள்ளிடத்தில் அதிகளவு வந்து கொண்டிருப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாதல்படுகை, வெள்ள மணல், முதலைமேடுதிட்டு ஆகிய கிராமங்ளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ளவர்கள் வெளியேறி அரசின் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.
படகுகள் மூலம் மீட்பு
இந்தநிலையில் கொள்ளிடம் ஆற்றில் நேற்றும் அதிகளவு தண்ணீர் சென்றது. நேற்று முன்தினம் வந்த தண்ணீரின் அளவை விட நேற்றைய தினம் தண்ணீரின் வரத்து அதிகரித்ததால் கொள்ளிடம் ஆறு கடல்போல காட்சி அளிக்கிறது. கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால் கரையோர கிராமங்களான மேலவாடி, பாலுறான் படுகை, சரஸ்வதி விளாகம், பூசை நகர், மீனவர் தெரு, சந்தப்படுகை, நாதல் படுகை, முதலைமேடு திட்டு, வெள்ள மணல், நடுத்திட்டு ஆகிய கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள விளைநிலங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களில் சிலர் தங்களது மாடி வீட்டின் மேல் தளத்தில் தங்கி உள்ளனர். குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உணவு-மருத்துவம்
முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு அரசு சார்பிலும், தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் சார்பிலும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகள் பள்ளி செல்வதற்கு அரசு சார்பில் விசைப்படகு வசதி செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 நாட்களாக மின்சாரம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சுகாதாரத்துறை சார்பில் 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கோபாலசமுத்திரம் ஊராட்சி பூசை நகர், சரஸ்வதி விளாகம் ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரில் சாக்கடை கலந்துள்ளது. இதனால், சுகாதார கேடு ஏற்படும் நிலை உருவானது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுத்ததோடு தண்ணீர் வடிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். பொதுப்பணித்துறை சார்பில் காட்டூர் கிராம பகுதியில் வலுவிழந்த கரைப்பகுதியில் கற்கள் கொட்டப்பட்டு பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ராமலிங்கம் எம்.பி. ஆய்வு
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நாதல்படுக்கை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல் உள்ளிட்ட கிராமங்களில் மயிலாடுதுறை ராமலிங்கம் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ேமலும், முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் தேவையான வசதிகள் கிடைக்கிறதா? என்று கேட்டறிந்த அவர், வெள்ளம் வடிய அரசு சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது, யாரும் பயப்பட வேண்டாம் என்று தெரிவித்தார். அப்போது நிவேதா முருகன் எம்.எல்.ஏ. மற்றும் கொள்ளிடம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.