வீட்டைவிட்டு ஓடிய பிளஸ்-2 மாணவன், மாணவி மீட்பு
வீட்டைவிட்டு ஓடிய பிளஸ்-2 மாணவன், மாணவி மீட்கப்பட்டனர்.
குடியாத்தத்தை அடுத்த கே.வி.குப்பம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் குடியாத்தம் நகரைச் சேர்ந்த பிளஸ்-2 படித்து வரும் மாணவரும் அதே பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் குடியாத்தம் மாணவியும் ெநருங்கி பழகி வந்தனர்.
கடந்த வாரம் அந்த மாணவி பள்ளிக்குச் செல்வதாக வீட்டை விட்டு கிளம்பி உள்ளார் அதேபோல் அந்த மாணவனும் வீட்டை விட்டு பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் இருவரும் வகுப்புக்கு வரவில்லை. அது குறித்து பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மாணவியின் பெற்றோரும், மாணவனின் பெற்றோரும் தனித்தனியாக தங்கள் பிள்ளைகளை காணவில்லை என குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தனர்.
அது குறித்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே இருவரையும் போலீசார் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை செய்தனர்.
அப்போது இருவரும் காதலித்து வந்ததாகவும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது போலீசாரிடம் பிடிபட்டதாகவும் கூறினர். இந்த வழக்கை 'போக்சோ' பிரிவுக்கு மாற்றி மாணவனை கைது செய்தனர். பின்னர் இருவரையும் வேலூரில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின்பேரில் மாணவன் சிறார் சீர்திருத்த பள்ளிக்கும், மாணவி காப்பகத்துக்கும் அனுப்பப்பட்டனர்.