பிச்சை எடுக்க பயன்படுத்திய 4 குழந்தைகள் மீட்பு

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் பிச்சை எடுக்க பயன்படுத்திய4 குழந்தைகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Update: 2023-08-16 19:23 GMT

பிச்சை எடுத்த பெண்கள்

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடி அமாவாசையையொட்டி நேற்று காலை ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தனர். இதனால் அம்மா மண்டபம் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது ஒரு சில பெண்கள் கைக்குழந்தைகளை இடுப்பிலும், தோளிலும் சுமந்து கொண்டு கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் பிச்சை எடுத்து வந்தனர். இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த குழந்தைகள் உண்மையிலேயே அதை சுமந்து வந்த பெண்களின் குழந்தைகள் தானா? என சந்தேகம் அடைந்தனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கும், குழந்தைகள் நலக்குழுவுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீசார் மற்றும் குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

4 குழந்தைகள் மீட்பு

இந்த சோதனையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த நாகமங்கலத்தை சேர்ந்த பண்ணாரி (வயது 23), மகாலெட்சுமி (22), அம்சவள்ளி (25), இந்திரா (27) ஆகிய 4 பெண்களை கைக்குழந்தைகளுடன் மீட்டனர். மீட்கப்பட்ட 4 பெண்கள் மற்றும் 4 குழந்தைகளையும் சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள காப்பகத்தில் தங்க வைத்தனர்.

விசாரணையில் இவர்கள் 4 பேரும் தங்களது சொந்த குழந்தைகளை வைத்து தான் பிச்சை எடுத்தனர் என்பது தெரியவந்தது. திருச்சி மாநகரில் இதுபோன்ற ஆதரவற்ற நிலையில் முக்கிய சந்திப்பு சிக்னல்கள், மற்றும் சாலையில் பிச்சை எடுத்து வருபவர்களை மீட்டு அவர்களுடைய மறுவாழ்வுக்காக காப்பகங்களில் ஒப்படைக்கப்படுவார்கள் என மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்