கரூர், குளித்தலையில் மனநலம் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மீட்பு

கரூர், குளித்தலையில் மனநலம் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

Update: 2023-06-20 18:37 GMT

கரூர் பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுற்றித்திரிந்து வந்தார். நேற்று கரூர் திருவள்ளுவர் மைதானம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சுற்றித்திரிந்ததை பார்த்த கலெக்டர் பிரபு சங்கர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு அந்த பெண்ணை உடனடியாக மீட்டு மனநல காப்பகத்தில் அனுமதித்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக ஸ்பீச் தெரபிஸ்ட் கனகராஜ், சாந்திவனம் மனநல காப்பகத்திற்கு தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டார். இதையடுத்து அந்த பெண்ணை சாந்திவனம் மீட்புக்குழுவினர் மீட்டு திருச்சியில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் தொடர் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பயிற்சிகளுக்காக பாதிக்கப்பட்ட பெண் கரூர் மாவட்டம், சீத்தப்பட்டியில் உள்ள மனநல காப்பகத்திற்கு மாற்றப்படுவார் என தெரிவித்தனர்.இதேபோல் குளித்தலை கடம்பர் கோவில் பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். அந்த பெண் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றித்திரிவதாகவும், அவரை மீட்டு உரிய சிகிச்சை அளிக்கும்படியும் தோகைமலை அருகே உள்ள மனநல காப்பகத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குளித்தலை பகுதிக்கு வந்த மனநல காப்பகத்தினர் அந்த பெண்ணை மீட்டனர். பின்னர் இது தொடர்பாக குளித்தலை போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுத்து அங்கு ஒப்புதல் கடிதம் பெற்று சிகிச்சைக்காக அவரை அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்