திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் திருப்பூர் டி.என்.கே.புரம் அருகில் ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.
அப்போது அந்த வழியாக மொபட்டில் மூட்டையுடன் சென்றவரை பின்தொடர்ந்து சென்றனர். அங்கு ஒரு அறையில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அங்கிருந்து 470 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த நபரிடம் விசாரித்தபோது அவர் திருப்பூர் டி.என்.கே.புரத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 32) என்பதும், அவர் எம்.எஸ்.நகர், டி.என்.கே.புரம் பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வடமாநிலத்தவர்களுக்கு அதிக விலையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.