சில்லறையில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சில்லறையில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விழுப்பணங்குறிச்சி, சுள்ளங்குடி, அழகியமணவாளன், தூத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் மினி பஜார் என்று கூறப்படுவது ஏலாக்குறிச்சி கிராம். இந்த பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் உரக்கடையை சுமார் 3 மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்து, அதிக விலைக்கு உரம் விற்றது ெதரியவந்ததாக கூறி, அந்த கடையை மூட உத்தரவிட்டனர். பின்னர் இப்பகுதியை சேர்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு சில்லறையில் உரம் கிடைக்கவில்லை. மேலும் சில்லறையில் உரம் வாங்க வேண்டும் என்றால் திருமானூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் சென்றுதான் சில்லறையில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து வாங்க முடியும். இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை என்றும், விவசாயிகளின் நிலையை கவனத்தில் கொண்டு உடனடியாக இந்த பகுதியில் சில்லறையில் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.