கரூர்-வாங்கல் சாலையில் உள்ள குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை

கரூர்-வாங்கல் சாலையில் உள்ள குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-18 18:30 GMT

குப்பைக்கிடங்கு

கரூர் ஐந்து ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் இருந்து சற்று தொலைவில் கரூர் மாநகராட்சி குப்பைக்கிடங்கு உள்ளது. கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தேங்கும் குப்பைக்கழிவுகள் ஆகியவற்றை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களால் நாள்தோறும் சேகரிக்கப்படும். பின்னர் அந்த குப்பைகள் மாநகராட்சி வாகனங்கள் மூலம் எடுத்து செல்லப்பட்டு வாங்கல் சாலையில் உள்ள கரூர் மாநகராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம்.

மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு மாநகராட்சி பணியாளர்கள் மூலம் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து அவற்றை உரம் தயாரிக்கும் பணிக்கு பயன்படுத்தி வந்தனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது.

புகை மண்டலமாக...

கோடை காலங்களில் வெயில் அதிகமாக இருக்கும் போது குப்பைக்கிடங்கில் திடீரென தானாக தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் நடக்கும். அப்போது கரூர்-வாங்கல் சாலையில் புகை வெளியேறி, அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளிக்கும். அப்போது வாகனங்களில் செல்பவர்கள் நிலைத்தடுமாறி விழுந்து சிறு, சிறு, விபத்துகளும் நடந்துள்ளன. மேலும் தீப்பிடித்து புகைமண்டலமாக காட்சியளிக்கும்போது கரூர்-வாங்கல் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாது. மாற்றுப்பாதையில்தான் வாகனங்கள் சென்றுவரும்.

குப்பைக்கிடங்கை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் குப்பைகள் மலைபோல் குவிந்து இருப்பதால் காற்று பலமாக வீசும் காலங்களில் குப்பைக்கிடங்கில் இருந்து குப்பைகள் காற்றில் பறந்து சாலையில் விழுகின்றன.

வாகன ஓட்டிகள் சிரமம்

இதன்காரணமாக கரூர்-வாங்கல் சாலை வழியாக பயணம் செய்யும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். குப்பைக்கிடங்கில் சுற்றுச்சுவர் மீது தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த குப்பைக்கிடங்கில் இருந்து அதிகளவில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கைப்பிடித்து கொண்டு செல்லும் அவலம் உள்ளது.மழைக்காலங்களில் குப்பைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் இன்னும் அதிகமாக இருக்கும். கரூர்-வாங்கல் சாலையின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான இருசக்கரம் மற்றும் நான்குசக்கர வாகனங்களில் பொதுமக்கள் சென்று வருகின்றனர். அவர்கள் இந்த துர்நாற்றத்தை கடந்துதான் தினமும் செல்ல வேண்டி உள்ளது. எனவே கரூர்-வாங்கல் சாலையில் இருக்கும் குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

மலைபோல் காட்சி அளிக்கிறது

அரசு காலனியை சேர்ந்த சேகர்:- கரூர்-வாங்கல் சாலையின் இருபுறங்களிலும் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. அப்போது இந்த குப்பைகள் அடிக்கடி தீப்பிடித்து எரிந்துள்ளன. இதன் காரணமாக ஏற்பட்ட புகைமண்டலத்தினால் விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. அப்போது வாங்கல் சாலையில் யாரும் செல்ல முடியாது. அதன்பிறகு தான் குப்பைக்கிடங்கை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. தற்போது ஒருபுறம் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. மற்றொருபுறம் குப்பைக்கிடங்கு மலைபோல் காட்சி அளிக்கிறது. இந்த குப்பைகள் தற்போது காற்றின் காரணமாக சாலையில் பறந்து விழுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக

வெங்கமேட்டை சேர்ந்த விஜயராமசாமி:- கரூர்-வாங்கல் சாலையில் உள்ள குப்பைக்கிடங்கை கடந்து செல்லும் போது முகம் சுழித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் குப்பைகளில் இருந்து அதிகளவில் துர்நாற்றம் வீசுகிறது. இந்த சாலையில் இருபுறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு கிடந்தன. தற்போது ஒருபுறம் அள்ளப்பட்டு உள்ளன. மற்றொருபுறம் உள்ள குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இது எப்போது அகற்றப்படும் என தெரியவில்லை. இங்கு குப்பைக்கிடங்கு இருப்பதால், இந்த பகுதியில் மக்கள் குடியிருக்க விரும்பாமல் உள்ளனர். இதனால் அந்த பகுதி வளர்ச்சியடையாமல் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே இந்த பகுதி இதுபோன்று தான் உள்ளது. இந்த சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏதும் இருக்காது. ஆனால் இந்த பகுதியை கடந்து செல்லும் போது துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கும். எனவே இந்த குப்பைகளை அகற்ற வேண்டும்.

ஈக்கள் மொய்க்கிறது

மின்னாம்பள்ளியை சேர்ந்த கந்தசாமி:- குப்பைக்கிடங்கால் துர்நாற்றம் அதிகமாக இருக்கிறது. குப்பைக்கிடங்கிற்கு சற்று தொலைவில் வீடுகள் உள்ளதால் இந்த பகுதியில் எப்போதும் துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கும். இதனால் அதிகளவில் எங்கள் பகுதியில் வீடுகள் இல்லை. இருப்பவர்களும் வேறு இடத்திற்கு சென்றுவிடுகிறார்கள். மேலும் குப்பைகளில் இருந்து பறந்து வரும் பிளாஸ்டிக் பேப்பர்கள் விவசாய நிலத்திலும், கிணற்றிலும் விழுகின்றன. இதனால் கிணற்றில் உள்ள பம்புகளில் சிக்கி மோட்டார் இயக்க முடியாத நிலையும் உள்ளது. கிணறு அதிக ஆழமாக இருப்பதால் விழும் பிளாஸ்டிக் பேப்பர்களை எடுக்க முடியவில்லை. இதனால் விவசாயம் செய்வதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. வயல்களில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் வந்து விழுகின்றன. இதனால் மாடுகள் மேய்க்க முடியவில்லை. மாடுகள் பிளாஸ்டிக் பேப்பர்களை விழுங்கும் நிலையும் உள்ளது. இந்த குப்பைகளினால் ஈக்கள் அதிகளவில் மொய்க்கிறது. இந்த குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றுவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை செய்யவில்லை. விரைவில் குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

விரைவில் அகற்ற வேண்டும்

பதினாறுகால் மண்டபத்தை சேர்ந்த மோகன்:- கரூர்-வாங்கல் சாலையில் இருக்கும் குப்பைக்கிடங்கில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த சாலையை கடந்து செல்லும் போது மூக்கைபிடித்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும் தீப்பிடித்து எரியும்போது அப்பகுதி புகைமண்டலமாக காட்சி அளிக்கும். அப்போது இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாது. இதனால் மாற்று பாதையில் வாகனங்களை திருப்பி விடுவார்கள். தற்போது காற்றின் காரணமாக குப்பைக்கிடங்கில் இருந்து குப்பைகள் சாலையில் விழுவதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. சாலையின் இருபுறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடந்தன. தற்போது ஒருபகுதியில் குப்பைகள் அகற்றப்பட்டுவிட்டன. மறுபுறம் மலைபோல் குப்பைகள் குவிந்து உள்ளன. அந்த குப்பைகளையும் விரைவில் அகற்ற வேண்டும். அப்போதுதான் இந்த சாலை வழியாக செல்ல முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்