இரவு நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

கடும் வெயிலால் பகலில் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளதால் இரவு நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2023-06-07 19:06 GMT

சிவகாசி, 

கடும் வெயிலால் பகலில் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளதால் இரவு நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கடுமையான வெயில்

தமிழகம் முழுவதும் கடந்த 20 நாட்களாக கடுமையான வெயில் பாதிப்பு உள்ளது. அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் வெயில் தினமும் சதம் அடித்து வருகிறது. இதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் தற்போது 12-ந் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு தமிழக அரசு இதனை அறிவித்தாலும் சில இடங்களில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இரவு நேர பஸ்

கோடை விடுமுறைக்கு பலர் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ள நிலையில் ஊருக்கு திரும்ப பலர் பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. கடுமையான வெயிலின் தாக்கத்தால் பகல் நேரங்களில் நீண்ட தூர பயணம் செய்ய முடியாத பலர் இரவு நேரங்களில் பயணம் செய்யும் வகையில் தங்களது பயண திட்டத்தை மாற்றி அமைத்துள்ளனர்.

ஆதலால் பொது மக்கள் வசதிக்காகவும், சொந்த ஊர் சென்றுள்ள மாணவர்கள் ஊர் திரும்ப வசதியாகவும் இரவு நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்