குரும்பலூர் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த கோரிக்கை

குரும்பலூர் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-12-11 19:18 GMT

அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 1960-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அரசு பள்ளி பொன்விழா கண்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில் குரும்பலூரை சேர்ந்த மாணவ-மாணவிகள் மட்டுமின்றி, குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட ஈச்சம்பட்டி, மேட்டாங்காடு, மூலக்காடு, திருப்பெயர், புதூர், பாளையம் ஆகிய கிராமங்களை சோ்ந்த மாணவ-மாணவிகளும், வெளியூர்களை சேர்ந்த மாணவ-மாணவிகளும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவிகளின் நலன் கருதி அரசினர் மாணவியர் விடுதி கடந்த 1995-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ந்தேதி தொடங்கப்பட்டது. பின்னர் அந்த விடுதி அரசினர் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

கட்டிடத்தின் உறுதி தன்மை குறைபாடு

அந்த விடுதிக்கு குரும்பலூர் பேரூராட்சி அலுவலகத்தின் கீழ்புறம் இருந்த இடத்தில் ரூ.31½ லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட கடந்த 2003-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ந்தேதி அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் அவரது ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு கடந்த 2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந்தேதி விடுதி திறக்கப்பட்டது. பின்னர் சில ஆண்டுகளிலேயே கட்டிடத்தின் உறுதி தன்மை குறைபாடு காரணமாக அந்த விடுதி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த விடுதி கட்டிடத்தின் முன்பு உள்ள இடத்தில் விடுதிக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது. தற்போது அரசினர் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் 34 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். ஆனால் முதலில் அந்த விடுதிக்கு கட்டப்பட்ட கட்டிடம் தற்போது பாழடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

புதர்மண்டி கிடக்கிறது

குரும்பலூர் 6-வது வார்டு காமராஜர் தெருவை சேர்ந்த ஆனந்த்:- பாழடைந்து காணப்படும் விடுதி கட்டிடம் தற்போது வேகமாக சேதமடைந்து வருகிறது. விடுதி கட்டிடத்தை சுற்றிலும், உள்ளேயும் மரம், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுவதால், ஏதோ சினிமா படத்தில் வரும் பேய் பங்களா போல் கட்டிடம் காட்சியளிக்கிறது. மேலும் விஷ ஜந்துக்களின் கூடாரமாக உள்ளது. இதனால் அதற்கு முன்பு உள்ள விடுதி கட்டிடத்தில் தங்கி பயிலும் மாணவிகள் உயிர் பாதுகாப்பு இல்லாமல் அச்சத்துடனே தங்கி படித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த விடுதியை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி முடியவில்லையென்றால் அந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மது அருந்தும் கூடாரம்

குரும்பலூர் 4-வது வார்டு நேரு தெருவை சேர்ந்த ராதா:- பயன்பாட்டில் இல்லாமல் உள்ள விடுதி கட்டிடம் விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் சமூக விரோதிகளின் மது அருந்தும் கூடாரமாக மாறி விடுகிறது. இதனை யாரும் கண்டு கொள்வதில்லை. கட்டிடம் எந்நேரமும் இடிந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே அந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி ஏதாவது அரசு கட்டிடம் புதிதாக கட்ட பயன்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இடித்து அப்புறப்படுத்த வேண்டும்

குரும்பலூர் 6-வது வார்டு காமராஜர் தெருவை சேர்ந்த ஜெயந்தி:- பயன்பாட்டில் இல்லாத விடுதி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி குரும்பலூரில் உள்ள அரசு பள்ளி அல்லது கல்லூரிக்கு கூடுதலாக மாணவியர் விடுதி கட்டலாம். தற்போது இயங்கி வரும் அரசினர் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியினை குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகே செயல்படும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியர் விடுதிக்கு மாற்றி, அந்த விடுதியை கல்லூரி அருகே இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிக்கு மாற்ற வேண்டும். இதனால் விடுதியில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மாணவிகளுக்கு எளிதாக இருக்கும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்