தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தை திறக்க கலெக்டரிடம் கோரிக்கை
மழைக்காலத்துக்கு முன்பு தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தை திறக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.;
தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தை மழைக்காலத்துக்கு முன்பு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு காரசேரியை சேர்ந்த மக்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் ஊரில் இயங்கி வரும் கல்குவாரியால் நீர்நிலைகள் மற்றும் விவசாயம் பாதிப்படைகிறது. கல்குவாரியில் எந்த நேரமும் செல்லும் கனரக வாகனங்களால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை எதிர்க்கும் இளைஞர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு வருகின்றனர். ஆகையால் கல்குவாரியை தடை செய்ய வேண்டும். பொய் வழக்கு போடும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
பஸ் நிலையம்
சாயர்புரத்தை சேர்ந்த மாநில காங்கிரஸ் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மச்சேந்திரன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கம் பணிகள் நடந்து வருகிறது. இதனால் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் மழை பெய்தால் மக்கள் நிற்க கூட போதுமான இடவசதி இல்லை. ஆகையால் மழைக்காலத்துக்கு முன்பு பழைய பஸ்நிலைய பணிகளை முடித்து திறக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
ஸ்டெர்லைட்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும், நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கையை முழுமையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.
ஆதரவு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலைக்கும் துப்பாக்கி சூடு சம்பவத்துக்கும் எவ்வித சம்பந்தம் இல்லை என்று நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் கூறி உள்ளது. தூத்துக்குடி வாழ் மக்களுக்கு வேலை கிடைக்க ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளனர்.