கரும்புக்கு கூடுதலாக சிறப்பு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

கரும்புக்கு கூடுதலாக சிறப்பு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-01 19:02 GMT

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள எறையூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம், தலைமை நிர்வாகி ரமேஷ் தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிகாரிகள் பேசுகையில், 2022-23-ம் ஆண்டு கரும்பு பருவத்திற்கு இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரம் டன் அரைக்கப்பட்டுள்ளது. இன்னும் 1 லட்சத்து 8 ஆயிரம் டன் அரைக்க வேண்டியுள்ளது. மே மாதம் 8-ந் தேதி வரை கரும்பு அரைப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 22-ந் தேதி வரை வெட்டிய கரும்புக்கு ரூ.62 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 38,860 டன் சர்க்கரை ரூ.14 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எத்தனால் உற்பத்தி செய்வதற்கான திட்டமிடலுக்கு இரண்டாவது ஆய்வுக் கமிட்டி வந்து ஆய்வு செய்து சென்றுள்ளனர். மொலாசஸ், மக்காச்சோளம் மற்றும் அரிசியில் இருந்து எத்தனால் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 60 ஆயிரம் லிட்டர் எத்தனால் தயாரிக்க ஆய்வு செய்யப்பட்டுள்ளது, என்றனர்.விவசாயிகள் சங்க தலைவர்கள் பேசுகையில், ஆலை வளாகத்தில் சிமெண்டு தளம் அமைக்க சுமார் ரூ.27 லட்சம் அனுமதி வழங்கியதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் தமிழக பட்ஜெட்டில் கரும்புக்கான விலை டன்னுக்கு ரூ.195 என அறிவித்துள்ளது கரும்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. கூடுதலாக சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். வெளி ஆலைகளுக்கு அனுப்பப்படும் கரும்புகளுக்கான தொகையை, பெரம்பலூர் சர்க்கரை ஆலை நிர்வாகமே வழங்க வேண்டும். தேவைக்கேற்ப மட்டும் கரும்பை வெட்ட அனுமதி அளிக்க வேண்டும். மின் உற்பத்தியை 12 மெகாவாட்டில் இருந்து 15 மெகாவாட் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கூட்டத்தில் அதிகாரிகள், கரும்பு விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்