குலசேகரன்பட்டினத்தில் நான்கு ரோடு சந்திப்பில் சிக்னலுடன் ரவுண்டானா அமைக்க கோரிக்கை
குலசேகரன்பட்டினத்தில் தொடர் விபத்துக்குளை தடுக்க நான்கு ரோடு சந்திப்பில் சிக்னலுடன் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடன்குடி:
குலசேகரன்பட்டினத்தில் தொடர் விபத்தை தடுக்க தசரா திருவிழாவிற்கு முன்பாக நான்கு ரோடு சந்திப்பில் சிக்னலுடன் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர் விபத்து
உடன்குடி-குலசை ரோடு, திருச்செந்தூர் -மணப்பாடு ரோடு ஆகியன சந்திக்கும் 4 ரோடு சந்திப்பு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. அந்த இடத்தில் சந்திப்பு அறிவிப்பு இல்லாததினாலும், அதிக வேகமாக செல்லும் வாகனங்களாலும் விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.
கடந்த சில மாதங்களில் மட்டும் இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விபத்துகளில் 10 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஏராளமான வாகனங்களும் சேதமடைந்துள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்துகளை தடுக்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தசரா திருவிழா
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அடுத்தமாதம் நடைபெற உள்ளது. இத்திருவிழாவிற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பிருந்தே பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர். இவ்விழாவிற்கு ஆயிரக்கணக்கான வாகனங்களில் பல்லாயிரக்கண்காகன பக்தர்கள் குலசேகரன்பட்டினம் வர உள்ளனர்.
பக்தர்கள் கோரிக்கை
இத்திருவிழாவிற்கு முன்னதாக, விபத்துக்களை தடுக்கும் வகையில் 4 ரோடுகள் சந்திப்பில் விரைவாக சிக்னல் விளக்குகளுடன் ரவுண்டான அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.