தொடக்கப்பள்ளியில் சமையல் அறை கட்ட கோரிக்கை

ராஜபாளையம் அருகே பள்ளியில் சமையல் அறை கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-03-22 19:26 GMT

ராஜபாளையம், 

ராஜபாளையம் அருகே பள்ளியில் சமையல் அறை கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமையல் அறை

ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் காமராஜர் நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 5-ம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில் அதேபகுதியை சேர்ந்த 58 மாணவிகள் உள்பட 104 பேர் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் இருந்த சமையல் அறை மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்ததால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக இடிக்கப்பட்டது. தற்போது சமையல் அறை இருந்த இடத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

திறந்த வெளியில் வைத்து மாணவர்களுக்கு உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் வகுப்பறைக்குள் இடம் ஒதுக்கப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளது. சமையல் அறை இல்லாததால் மழை, வெயில் போன்ற அனைத்து நேரங்களிலும் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் திறந்த வெளியிலேயே பணியாளர்கள் சமையல் செய்து வருகின்றனர்.

அதிகாரிகள் நடவடிக்கை

திறந்த வெளியில் சமையல் செய்வதால் தங்கள் குழந்தைகள் உண்ணும் சத்துணவின் தரம் மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்றோர்கள் சென்று புகார் அளித்த போது, அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளதாகவும், விரைவில் கட்டிடம் கட்டப்படும் எனவும் கூறியதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்கும் படி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த பொது மக்கள், அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்