ஷட்டர்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

ஆனைக்குட்டம் அணை ஷட்டர்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-04 20:01 GMT


ஆனைக்குட்டம் அணை ஷட்டர்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனைக்குட்டம் அணை

விருதுநகர் அருகே அர்ஜுனா நதியின் குறுக்கே ஆனைக்குட்டம் அணை மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அணை சுற்றியுள்ள கிராம விளைநிலங்களுக்கு பாசன வசதி செய்வதற்கும், விருதுநகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் என்ற நிலையில் கட்டப்பட்டது.

அணை கட்டப்பட்டதில் இருந்தே ஷட்டர் பழுதால் மழைக்காலங்களில் கூட நீரைத்தேக்கி வைக்க முடியாத நிலை நீடிக்கிறது. அவ்வப்போது பொதுப்பணி துறையினர் தூத்துக்குடியில் இருந்து முத்துக்குளிக்கும் வீரர்களை அழைத்து வந்து ஷட்டர்களின் அடியில் மணல் மூடைகளை அடுக்கி நீர்க்கசிவை தடுக்க முயற்சிகள் மேற்கொண்டாலும் அது உரிய பலன் கிடைக்காத நிலையில் எதிர்பார்த்த அளவிற்கு பாசனத்திற்கும் குடிநீருக்கும் இந்த அணை பயன்படாத நிலை உள்ளது.

நிதி ஒதுக்கீடு

இந்தநிலையில் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன் இப்பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் எடுத்துக் கூறி ஷட்டர்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில் அமைச்சர் துரைமுருகன் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

ஷட்டர்களை சீரமைக்க ரூ.49 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ஆனாலும் இதுவரை நிதி ஒதுக்கீடு கிடைக்காத நிலையில் ஷட்டர்கள் சீரமைக்கப்படாத நிலை நீடிக்கிறது. எனவே மழைக்காலத்திற்குள்ளாவது ஷட்டர்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து சீரமைப்பு பணியை தாமதம் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்