எஸ்.புதூர் ஒன்றியத்தில் போக்குவரத்து வசதி இல்லாததால் மாணவர்களின் கல்லூரி கனவு கானல்நீராகும் நிலை

எஸ்.புதூர் ஒன்றியத்தில் போக்குவரத்து வசதி இல்லாததால் இப்பகுதி மாணவர்களின் கல்லூரி கனவு கானல்நீராகிவிடுகிறது.

Update: 2023-02-02 18:45 GMT

எஸ்.புதூர்

எஸ்.புதூர் ஒன்றியத்தில் போக்குவரத்து வசதி இல்லாததால் இப்பகுதி மாணவர்களின் கல்லூரி கனவு கானல்நீராகிவிடுகிறது.

போக்குவரத்து வசதி

சிவகங்கை மாவட்டத்தில் பின் தங்கிய ஒன்றிய பகுதியும், மலை சார்ந்த பகுதியுமான இந்த ஒன்றியத்தில் 5-க்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. ஆண்டு தோறும் இப்பள்ளிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறுகின்றனர். இதுதவிர வெளியூர் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்தும் பலர் 12-ம் வகுப்பு முடித்து வெளியேறுகின்றனர். ஆனால் இந்த மாணவர்களில் வெகு சிலர் மட்டுமே மேற்படிப்புக்காக கல்லூரி செல்கின்றனர். பலரது கல்லூரி கனவுகள் கானல் நீராகவே மாறிவிடுகின்றது. இந்த ஒன்றியத்தில் எந்த ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியோ, தொழில் நுட்ப கல்லூரியோ இல்லாததே இதற்கு காரணம்.

இப்பகுதி மாணவர்கள் மேற்படிப்புக்காக கல்லூரி செல்ல வேண்டும் என்றால் 30 முதல் 50 கி.மீ. தூரம் வரை சென்று வர வேண்டியுள்ளது. அதே நேரம் அந்த ஊர்களுக்கு இங்கிருந்து குறித்த நேரங்களுக்கு பஸ் வசதி கிடையாது.

வேலைக்கு செல்லும் நிலை

கல்லூரிக்கு செல்ல சிங்கம்புணரி, பொன்னமராவதி அல்லது பக்கத்து மாவட்டங்களுக்கு சென்று 2 முதல் 3 பஸ்கள் மாறி, மாறி பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் கல்லூரிகளுக்கு செல்ல காலை 6 மணிக்கு வீட்டிலிருந்து சென்று இரவு 8 மணிக்கு மேல்தான் வீடு திரும்பும் நிலை உள்ளது. இதன் காரணமாக பல மாணவர்கள் மேற்படிப்புக்கு செல்வது கிடையாது. குறிப்பாக மாணவிகள் பெரும்பாலானோர் கல்லூரி கல்வியை நினைத்து பார்க்கவே முடிவதில்லை.

இப்பகுதியில் 12-ம் வகுப்பு படித்து முடிக்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் பள்ளிப்படிப்பு முடித்த கையோடு கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் வேலைக்கு சென்று விடுகின்றனர். ஒரு சிலர் உள்ளூரிலேயே விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தீயணைப்பு மீட்பு பணி வாகனம்

மேலும் இந்த மலை பகுதிகளில் கிராமம் அதிக அளவில் உள்ளது. இங்கு இயற்கை இடர்பாடுகள் மற்றும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் மீட்பு பணிக்காக சுமார் 15 கி.மீ. தொலைவில் இருந்து மீட்புபணி வாகனம் வரவேண்டி உள்ளது. இதனால் பாதிப்புகள் அதிகளவில் ஏற்பட்டு விடுகின்றது.

எனவே, பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மீட்க எஸ். புதூர் ஒன்றியத்திற்கு தனி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வாகனம் வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்