அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத ஊதியம் உடனே வழங்க வேண்டும்-தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத ஊதியத்தொகை உடனே வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வைத்துள்ளது.

Update: 2023-01-28 18:45 GMT

காரைக்குடி

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத ஊதியத்தொகை உடனே வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வைத்துள்ளது.

மாத ஊதியம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணை பொது செயலாளருமான ரெங்கராஜன் காரைக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புத்தாண்டு பிறந்த ஜனவரி 2023 மாதத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் கிடைக்காது என்ற தகவல் பேரிடியாய் தாக்கியுள்ளது. அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு ஜனவரி 2023 ஊதிய பட்டியல் தயாரிக்கும் போது நிதி ஒதுக்கீடு இல்லை என்பதால் ஊதிய பட்டியல் தயாரிக்க முடியவில்லை. 17.1.2023-க்கு முன்னர் தயாரித்த ஊதிய பட்டியல்கள் மட்டும் ஜெனரேட் ஆகி வந்துள்ளது. நிதி ஒதுக்கீடு இல்லாததால் ஜெனரேட் ஆகி வந்த பில்லையும் கருவூலத்தால் பாஸ் செய்ய முடியாது என்று கூறப்படுகிறது.

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் மூலம் இனி சம்பளம் பில் போடுவதற்கு அதிக நாட்கள் எடுக்க முடியாது. இதன் மூலம் பில் போட்ட உடனே டோக்கன் நம்பர், ஈசிஎஸ் நம்பர் வந்து விடும். இனி டோக்கன் போடுவதற்கும், பில் பாஸ் ஆகிவிட்டதா என்று பார்ப்பதற்கும் அடிக்கடி கருவூலம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஊதியத்தொகை

தேவையில்லாமல் கருவூலத்தில் பில் நிறுத்தி வைக்க முடியாது. ஆடிட் போட வேண்டும் என்றால் உடனே போட வேண்டும். அதனையும் நமது அலுவலகத்தில் இருந்தே பார்த்து கொள்ளலாம். இதனால் அரசு பணியாளர்களுக்கு மிகுந்த நன்மை என்றெல்லாம் தேர்தல் வாக்குறுதியாக பிரசாரம் நடந்தது. ஆனால் காலம் போகப்போக இதனால் ஏற்படும் சிரமங்கள் அதிகரித்துவிட்டது. இதன் அடுத்த கட்டமாக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி 2023 மாதத்தில் ஊதியம் கிடைக்காது என்ற நிலை வந்து விட்டது. இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்று எவராலும் உறுதியாக பதில் சொல்ல முடியவில்லை.

இது உண்மையா அல்லது உள்நோக்கத்தோடு செயல்படுத்தப்படுகிறதா என்ற அச்சம் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறா? அல்லது ஊதியம் வழங்க நிதி இல்லையா? என்று புரியாத புதிராக உள்ளது.

அரசின் கடமை

எது எப்படி இருந்தாலும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். ஊதியம் இல்லை என்பது எவரும் எளிதில் கடந்து போகும் விஷயமல்ல. வாழ்வாதாரத்தின் அடிப்படை உரிமையை பறிப்பதாகும். எனவே அலட்சியம் காட்டாமல் அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விரைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி 2023 மாத ஊதியத்தை, மாத கடைசி நாளில் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை கல்வித்துறை மற்றும் நிதித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இதில் முதல்-அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றார். அப்போது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் அன்பரசு உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்